Last Updated : 16 Dec, 2014 12:09 PM

 

Published : 16 Dec 2014 12:09 PM
Last Updated : 16 Dec 2014 12:09 PM

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 1

ஆப்கானிஸ்தான் நமக்கு அப்படியொன்றும் அந்நியப் பிரதேசம் அல்ல. ஒரு காலத்தில் அதன் ஒரு பகுதி நம் நாட்டை ஆட்சி செய்தவர்கள் கையில் இருந்தது. வேறொரு காலத்தில் இந்தியாவின் சில பகுதிகள் ஆப்கானியருக்கு வசப்பட்டது.

பாகிஸ்தான் மட்டும் உருவாகவில்லை என்றால் ஆப்கானிஸ்தான் நமது அண்டை நாடு! துரியோதனனின் மாமன் சகுனியைத் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? அவன் இன்றைய ஆப்கானிஸ்தானிலுள்ள காந்தார தேசத்து இளவரசன். ரிக்வேதம் தோன்றியது ஆப்கானிஸ்தானில் என்கிறார்கள்.

கொள்ளை அடிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட கஜினி முகம்மது நமக்கு அறிமுகமானவர்தான். அவர் பெயரில் கஜினி எப்படி ஒட்டிக் கொண்டது? கஜினி என்ற பகுதியை ஆண்டு வந்ததால்தான். கஜினி என்பது ஆப்கானிஸ்தானிலுள்ள ஒரு பகுதி.

‘‘இந்தியா என் கடும் எதிரி. அமெரிக்காவும் இந்தியாவும்தான் என் முதல் எதிரிகள்’’ என்ற ஒசாமா பின்லேடன் தன் தலைமறைவு வாழ்க்கைக்குப் பெரும்பாலும் தேர்ந்தெடுத்த நாடு ஆப்கானிஸ்தான்தான். காஷ்மீர் தீவிரவாதிகளால் இந்திய விமானம் கடத்தப்பட்டு பேரம் பேசப்பட்டது நினைவிருக்கிறதா? அந்த இடம் காந்தஹார் - இன்றைய ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதி.

வேறென்ன வேண்டும் நாம் ஆப்கானிஸ்தானைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு?

ஆப்கானிஸ்தான் சரித்திரத்தை முழுமையாக எழுதுவது இருக்கட்டும், நினைத்துப் பார்ப்பதேகூட பிரமிப்பை ஏற்படுத்தும். இதற்கு முன் நியூசிலாந்தைப் பற்றி எழுதியபோது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மட்டுமே குடியேற்றம் நிகழ்ந்த நாடு என்று குறிப்பிட்டோம். ஆப்கானிஸ்தான்? ஐம்பதாயிரம் வருடங்களுக்குக் முன்பாகவே அங்கு மனிதர்கள் குடியேறிவிட்டனர். சிந்துசமவெளி நாகரிகம் பற்றி இன்றைக்கு வியந்து பேசுகிறோம். அப்போது அங்கு வாழ்ந்தவர்களுக்கு உணவுப் பயிர்கள் தயாரானதே ஆப்கானிஸ்தான் பிரதேசத்தில்தான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்தத் தொடரில் ஆப்கானிஸ்தான் என்று குறிப்பிடும்போது நீங்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். கி.பி.1747 அல்லது அதற்குப் பின்னால் வரும் வருடங்களில் இப்படிக் குறிப்பிடும்போது அது நவீன ஆப்கானிஸ்தானைக் குறிக்கிறது. அதற்கு முன்னால் உள்ள காலகட்டத்தைப் பொருத்தவரை ஆப்கானிஸ்தான் எனும்போது தற்போதைய ஆப்கானிஸ்தான் மற்றும் அதைக் சூழ்ந்த பகுதிகள் ஆகியவற்றை இணைத்துதான் குறிப்பிடுகிறோம்.

இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பத்தான் என்று ஓர் இனம் உண்டு. இவர்களை ஆப்கானிஸ்தானில் பஷ்டூன் என்று குறிப்பிடுகிறார்கள். நவீன ஆப்கானிஸ்தானின் முதல் மன்னர் அகமது ஷா. இவர் பஷ்டூன் இனத்தைச் சேர்ந்தவர். 1978-ல் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைப் கைப்பற்றும் வரை பஷ்டூன் இனத்தவர்தான் ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்தார்கள். எனவே தாங்கள்தான் உண்மையான ஆப்கானியர்கள் என்ற எண்ணம் இவர்களுக்கு உண்டு.

பஷ்டூன் இனத்தவர் உயரமாக, சிவப்பாக, கருப்பு அல்லது பழுப்பு வண்ணத் தலைமுடியுடன் காணப்படுகிறார்கள். கண்களும் பழுப்பு வண்ணத்தில் இருக்கும். இவர்களின் மொழியான பஷ்டு என்பது பாரசீக மொழியோடு தொடர்பு கொண்டது. ஆப்கானிஸ்தானைப் பற்றி எழுதும்போது ஒரு குறிப்பிட்ட இனத்தைப் பற்றி இவ்வளவு விளக்கம் ஏன்? காரணம் உண்டு. பஷ்டூன்கள் பற்றி மட்டுமல்ல ஆப்கானிஸ்தானில் வசிக்கும் வேறு சில இனத்தவரைப் பற்றியும் தெரிந்து கொண்டால்தான் ஆப்கானிய சரித்திரத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

அந்த நாட்டின் தலையெழுத்தையே புரட்டிப் போட்டதில் இந்தப் பல இனங்களுக்கு நடுவே நிலவிய பகைமைக்கு முக்கிய பங்கு உண்டு. ஆப்கானிஸ்தானில் வாழும் அத்தனை பேருமே முஸ்லிம்கள் என்று கூறிவிடலாம். துல்லியமாகச் சொல்வதானால் ‘99 சதவிகிதத்துக்கும் அதிகமாக’.

ஆனால் இந்த முஸ்லிம்களில் இருபதுக்கும் மேற்பட்ட இனங்கள். ஒவ்வொரு இனத்தவரையும் பார்த்தாலே கண்டுபிடித்துவிட முடியும். காரணம் அவர்களின் தலைப்பாகை. ஒவ்வொரு இனத்தவருக்கும் ஒவ்வொரு விதமான டர்பன். இவர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் தீராப் பகைவர்கள்.

பஷ்டூன்களுக்கும் ஹசாராக்களுக்கும் எப்போதுமே ஆகாது. பஷ்டூன்கள் இஸ்லாமின் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள். ஹசாராக்கள் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். போதாதா? தவிர ஹசாராக்களுக்கு அடர்த்தியான, நீளமான தாடி கிடையாது. இதனாலேயே பிற முஸ்லிம்களின் வெறுப்புக்கு அவர்கள் ஆளாவதுண்டு. ஹசாராக்கள் மங்கோலிய வம்சாவளியில் வந்தவர்கள் என்பதாலும் பார்ப்பதற்கு அவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் பஷ்டூன்கள் சுமார் 42 சதவிகிதம்பேர். ஹசாராக்கள் 15 சதவீதம். இரண்டுக்கும் நடுவே உள்ளவர்கள் தஜிக்குகள். தஜிக் இனத்தவர் இரானிய மூதாதையர்களைக் கொண்டவர்கள். இவர்களில் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்களும் உண்டு. ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களும் உண்டு. ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆப்கானிஸ்தானின் பின்னடைந்த மற்றும் மலைப்பகுதிகளில் வாழ்ந்துவர, காபூல், ஹெராத் போன்ற நகரப் பகுதிகளில் சன்னி பிரிவினர் வசிக்கிறார்கள். படிப்பிலும் சிறந்து பணத்திலும் கொழிக்கிறார்கள் இவர்களில் அநேகம் பேர். ஆப்கானிஸ்தான் மக்கள்தொகையில் 26 சதவிகிதம் பங்கு வகிப்பது தஜிக்குகள்தான்.

ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான தஜிகிஸ்தான் தேசத்தில் பெரும்பான்மையாக வசிப்பது தஜிக்குகள்தான். ஆனால் அங்கு வசிப்பதைவிட மிகமிக அதிகம்பேர் ஆப்கானிஸ்தானில்தான் வசிக்கிறார்கள் (பாகிஸ்தானைவிட இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்களே, அதுபோலத்தான்).

போதாக்குறைக்கு ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகள் எக்கச்சக்கம். வடமேற்குப் பகுதியில் சீனா. கிழக்கிலும், தெற்கிலும் பாகிஸ்தான். மேற்கில் இரான். வடக்குப் பக்கம் உஸ்பெகிஸ்தான், துருக்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் (இந்த மூன்றும் இப்போது தனி நாடுகள். முன்பு ஒன்றிணைந்த சோவியத் யூனியனின் பகுதிகள்). இதன் காரணமாகவும், ஆப்கானிஸ்தான் அரசியல் பல பரபரப்புகளுக்கு உள்ளானது.

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x