

அமெரிக்காவின் பெர்க்லி நகரில் கருப்பின இளைஞரை போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொன்றதையடுத்து அங்கு மீண்டும் போராட்டம் வெடித் துள்ளது.
மிஸ்ஸவுரி மாகாணம், பெர்க்லி பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருட்டு நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் ரோந்து சென்ற போலீஸார், அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீஸாருக்கு ஒத்துழைப்பு அளிக்காமல், கருப்பின இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் போலீஸாரை சுட முயன்றார். உடனடியாக எச்சரிக்கை அடைந்த வெள்ளையினத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி, அந்த இளைஞனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். உயிரிழந்த 18 வயதான இளைஞரின் பெயர் அந்தோனியா மார்டின் என போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக செயின்ட் லூயில் மாவட்ட காவல் துறை அதிகாரி ஜான் பெல்மர் கூறியதாவது: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியிடம் துறை ரீதியான விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த இளைஞருக்கு ஏற்கெனவே பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் தொடர்பு உள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு ஜான் பெல்மர் கூறினார்.
இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் 300-க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் மீது கல்வீச்சில் ஈடுபட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். மார்டினின் தாயார் டோனி மார்டின் கூறும்போது, “எனது மகன் துப்பாக்கியை காட்டி சுட முயன்றதாக கூறியது தவறான தகவல். போலீஸாரை கண்டவுடன், அவன் தப்பியோட முயன்றுள்ளான். அப்போதுதான் போலீஸ் அதிகாரி, அவனை சுட்டுக் கொன்றுள்ளார்” என்றார்.
சமீபத்தில், பெர்குசன் நகரில் மைக்கேல் பிரவுன் என்ற கருப்பின இளைஞரை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரி டேரன் வில்சன் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்ய போதிய முகாந்திரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது. இதையடுத்து அப்பகுதியில் கருப்பின மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட் டனர்.