

பெஷாவரில் ராணுவம் நடத்தும் பள்ளியில் படிக்கும் அதிக வயதுடைய மாணவர்களை மட்டும் சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டோம் என்று தலிபான்கள் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு வகுப்பாகச் சென்று குழந்தைகளை சரமாரியாக தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். 9-வது வகுப்பு படிக்கும் மாணவர்களை வரிசையாக நிற்க வைத்து, அனைவரையும் சுட்டுத் தள்ளியுள்ளனர். தய்யாப் என்ற 14 வயது மாணவனின் உடலில் மட்டும் 9 குண்டுகள் பாய்ந்த அடையாளம் இருந்தது.
இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்த தலிபான் தீவிரவாத அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில், எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தினர் உயிரிழந்துள்ளனர்.
அதற்கு பதிலடி தரும் வகையிலும், எங்களின் வேதனையை ராணுவத்தினர் உணரும் வகையிலும், ராணுவ வீரர்களின் குழந்தைகள் படிக்கும் இப்பள்ளியை தாக்க முடிவு செய்தோம்.
குறைந்த வயதுடைய குழந்தைகளை கொல்ல வேண்டாம் என்றும், அதிக வயதுடைய மாணவர்களை மட்டும் சுட்டுக்கொல்லுங்கள் என்றும் எங்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டிருந்தோம்” என விளக்கம் அளித்திருக்கிறது.