

லண்டனில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சனின் சமூக சேவைகளைப் பாராட்டி சிறப்பு விருது வழங்கப்பட்டது.
41 வயதாகும் ஐஸ்வர்யா ராய், தனது கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராதனா, அம்மா விருந்தா ராஜ் ஆகியோருடன் இந்த நிகழ்ச்சி யில் பங்கேற்றார். ஐஸ்வர்யா ராய் 1994-ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதல் அவர் ஆற்றி வரும் சமூக சேவைக்காக அவரை கவுரவிக்கும் வகையில் இந்த சிறப்பு விருது வழங்கப்பட்டது.
உலக அழகி பட்டம் வென்றவர்களில் தனது நடிப்புத் திறமை, சமூக சேவையால் இப்போது வரை சர்வதேச அளவில் பிரபலமாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய் என்று அவருக்கு விருது வழங்கும்போது முன்னுரையில் தெரிவிக்கப்பட்டது.
தனக்கு அளிக்கப்பட்ட சிறப்பு விருதை ஏற்றுக் கொண்டு பேசிய ஐஸ்வர்யா ராய், உலக அழகி பட்டம் வென்று சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் என்னை நினைவில் வைத்து எனக்கு விருது வழங்கிய உலக அழகி போட்டி நடத்தும் அமைப்பினருக்கு நன்றி தெரித்துக் கொள்கிறேன். இந்த விருது எனக்கு கிடைத்த கவுரவம் என்றார்.