

பெஷாவர் நகரில் உள்ள ராணுவப் பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
9-ம் வகுப்பைச் சேர்ந்த தாவூத் இப்ராஹிம் (15) என்ற மாணவர் மட்டும் அன்று பள்ளிக்கு செல்லவில்லை. இம்மாணவர் முதல்நாள் இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவந்துள்ளார். இந்நிலையில் மறுநாள் நீண்டநேரம் தூங்கிவிட்டார். இதனால் சம்பவ நாளன்று இவர் பள்ளிக்குச் செல்லவில்லை. இம்மாணவர் முதல்நாள் இரவு அலாரம் வைத்துவிட்டு படுத்தாலும் இது மறுநாள் காலை ஒலிக்கவில்லை. அலாரம் பழுதானதால் இவர் உயிர் தப்பியுள்ளார்.
நேற்று தனது நெருங்கிய நண்பர்கள் 6 பேரின் இறுதிச் சடங்கில் இப்ராஹிம் பங்கேற்றார். இப்ராஹின் ஜூடோ பயின்றவர், முரட்டுத்தனமானவர். ஆனால் இந்த சம்பவத்தால் அவர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். நண்பர்களின் இறுதிச் சடங்குக்கு சென்றுவந்த பின் இப்ராஹிம் முகத்தில் இதுவரை எந்த உணர்ச்சியையும் காணமுடியவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இம்மாணவரின் மூத்த சகோதரர் சுபியான் கூறும்போது, “இப்ராஹிமின் சக மாணவர்கள் இப்போது யாரும் உயிரோடு இல்லை. இது தலைவிதி” என்றார்.
பெஷாவர் ராணுவ பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்கள் கிட்டத்தட்ட அனைவரும் கொல்லப்பட்டுள்ள நிலையில் அப்பள்ளியில் இனி 9-ம் வகுப்பு செயல்பட வாய்ப்பில்லை என்கின்றனர்.