Last Updated : 15 Dec, 2014 09:48 AM

 

Published : 15 Dec 2014 09:48 AM
Last Updated : 15 Dec 2014 09:48 AM

நாளை சனிப்பெயர்ச்சி: சனீஸ்வர பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கிறார்

ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வதே பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. எல்லா கிரகங்களும் பெயர்ச்சி அடைகிறது என்றாலும் சனிப்பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சியைத்தான் நாம் முக்கியமானதாகக் கருதுகிறோம். இரண்டு பெயர்ச்சிக்கும் கோயில்களுக்கு சென்று வழிபட்டு நம் ராசிக்குரிய பலன்களை எதிர்பார்த்து அதன்படி நடந்து கொள்கிறோம்.

சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர மொத்தம் 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால் அந்த முப்பது ஆண்டுகளையும் 12 ராசிகளுக்கும் சராசரியாக பிரித்தால் இரண்டரை ஆண்டுகள் வரும். அப்படி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் இருந்து அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு மற்றொரு ராசிக்கு சனி இடம் பெயர்தலையே சனிப்பெயர்ச்சி என்கிறோம்.

தற்பொழுது துலாம் ராசியில் உச்சம் பெற்ற கிரகமாக இருந்துவந்த சனீஸ்வர பகவான் விருச்சிக ராசிக்கு பழமையான திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நவ.2–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.54 மணிக்கு இடம் பெயர்ந்தார். இந்த சனிப்பெயர்ச்சியை தமிழ்நாட்டில் யாரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. கேரள மாநிலம் மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மட்டுமே அந்த சனிப்பெயர்ச்சியை கணக்கில் கொண்டார்கள்.

தமிழ்நாட்டின் மிக முக்கிய ஆன்மிக விழாவாக எதிர்வரும் 16-ம் தேதி நடைபெறும் சனிப்பெயர்ச்சியைத்தான் பக்தர்களும், ஜோதிட வல்லுநர்களும் குறிப்பிடுகின்றனர். மிகப்பழமையான பஞ்சாங்கமாக கருதப்படும் வாக்கிய பஞ்சாங்க கணித முறைப்படி அன்றுதான் சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. அதன்படி வரும் மார்கழி மாதம் 1-ம் தேதி (டிசம்பர் 16) பிற்பகல் 2.43 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கிறார்.

தமிழ்நாட்டின் மத்திய மண்டலப் பகுதிகள் மற்றும் புகழ்பெற்ற திரூவாரூர் அருகே உள்ள திருக்கொள்ளிக்காடு, காரைக்காலின் திருநள்ளாறு ஆகிய தலங்களில் உள்ள சனீஸ்வர பகவான் ஆலயங்களில் அன்றுதான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது,,

சனிப் பெயர்ச்சியில் பலனடையப் போகும் ராசிகள்

மிக அதிகமானதும் நல்லதுமான பலன்களை பெறப்போவது மிதுனம், கன்னி மற்றும் மகரம் ஆகிய ராசிகள். சனிபகவான் தன்னுடைய ஆறாமிட சஞ்சாரத்தின் மூலம் மிதுன ராசிக்கும் மூன்றாமிட சஞ்சாரத்தின் மூலம் கன்னி ராசிக்கும் மற்றும் பதினொறாமிட சஞ்சாரத்தின் மூலம் மகர ராசிக்கும் நற்பலன்களை வழங்க உள்ளார். கடகம், கும்பம் மற்றும் மீன ராசிகளுக்கு மத்திம பலன்களையும் வழங்க உள்ளார். அதே சமயம், மேஷம்,ரிஷபம் சிம்மம், துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மேஷத்துக்கு அஷ்டம சனி, ரிஷபத்துக்கு கண்ட சனியும், சிம்மத்துக்கு அர்த்தாஷ்டம சனியும், விருச்சிகத்துக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனியும், தனுசுக்கு ஏழரைச் சனியில் விரய சனியுமாக அமைவதால் கெடு பலன்களுக்கான வாய்ப்பு இருக்கிறது.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

இந்த சனிப்பெயர்ச்சிக்கு ஆலயம் சென்று தொழுவதே சாலவும் நன்று. குறிப்பாக திருநள்ளாறு திருத்தலத்தில் சனி கிரகத்தின் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி, அனுக்கிரக மூர்த்தியாக அபய வரத முத்திரையுடன் அருளாட்சி செய்கிறார். இங்கு சென்று ஒரு நாள் தங்கி வழிபடுவது நல்லது. சனிப் பெயர்ச்சிக்கு பல லட்சம் பேர் வழிபட வருவதால் அன்று செல்ல முடியாதவர்கள் பதினைந்து நாள் முன்போ, பின்போகூட செல்லலாம். திருக்கொள்ளிக்காட்டில் உள்ள சனீஸ்வரர் பொங்குசனீஸ்வரராக அருள் பாலிக்கிறார்.

மதுரை மாவட்டம், தேனியிலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் உள்ள குச்சனூரிலும் சனீசுவரர் மிக கீர்த்தி பெற்றவராக விளங்குகிறார். கல்தூண் போன்ற உருவத்தில சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். நாமக்கல் அருகிலுள்ள தத்தகிரி முருகன் ஆலயத்தில் அமர்ந்த நிலையில் எட்டடி உயரமான சனீஸ்வரர் மேற்கு நோக்கி ஆலயம் கொண்டுள்ளார். சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் 'வட திருநள்ளாறு' என்ற பெயரில் மனைவியுடன் அற்புதக் காட்சி தருகிறார் சனீஸ்வரர். மும்பையில் சனீஸ்வரனுக்கு சிறிய தனிக் கோயில்கள் நிறைய உண்டு. நாசிக் அருகிலுள்ள சனி சிங்கணாப்பூரில் சனி பகவான் நான்கடிக்கு மேற்பட்ட உயரத்தில் பாறை வடிவில் சுயம்புவாகக் காட்சி தருகிறார். இந்த சனி பகவானை ஆண்கள் மட்டுமே சுத்தமாகக் குளித்து ஆலயத்திலேயே கிடைக்கும் ஆடை அணிந்து பூசிக்கலாம். பெண்கள் விலகி நின்றே தரிசிக்க வேண்டும்.

எப்படி வழிபாடு செய்வது ?

சனிக்கு உகந்த தானியம் எள். அதனால் எள் சாதம், நல்லெண்ணெய் தீபம் ஆகியவை கொண்டு அவரை வழிபடலாம். சனிக்கு உகந்தவர்கள் ஆஞ்சநேயர், விநாயகர், பெருமாள். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தி, உளுந்து வடை மாலை சாற்றி, உள்ளன்போடு துதிக்க சனியின் துன்பங்கள் குறையும். புரட்டாசி சனி விரதம் இருப்போர் எள்ளு சாத நிவேதனம் செய்து, விநியோகம் செய்ய வேண்டும். "உன் பக்தர்களை அண்டமாட்டேன்" என்று சனி பகவான் பெருமாளிடம் வாக்குக் கொடுத்துள்ளதாக புராணச் செய்தி ஒன்று கூறுகிறது. சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகுந்த மகிமை வாய்ந்தது. அன்று விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று வழிபட்டு, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி, எள் நைவேத்யம் செய்து வழி பட்டால் சனியின் அருள் பெறலாம்.சனி பகவானின் வாகனம் காக்கை. தினமும் காக்கைக்கு சாதம் வைப்பதன் மூலம் சனியின் பாதிப்பு குறையும்.

ஏழரைச்சனி என்றால் என்ன?

ஏழரைச் சனி என்பது ஒரு ராசிக்கு இரண்டரை ஆண்டுகள் வீதம் ஒரு ராசி, அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளில் சனி இருக்கும் ஏழரை ஆண்டுகள் என்பதைத்தான் ஏழரைச்சனி என்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x