Last Updated : 10 Dec, 2014 10:35 AM

 

Published : 10 Dec 2014 10:35 AM
Last Updated : 10 Dec 2014 10:35 AM

புதிதாய்ப் பிறந்த ‘நியூ’சிலாந்து 2

நியூசிலாந்து பற்றிய செய்திகள் அடிக்கடி நம் காதுகளை எட்டுவதில்லை. அவர்கள் நாட்டின் கிரிக்கெட் அணியினரைப் பற்றி மட்டுமேதான் நாம் கேள்விப்படுகிறோம். அந்த அளவுக்கு அமைதியான நாடா அது? பரபரப்பான எந்த விஷயமுமே அங்கு நடப்பதில்லையா?

மேலோட்டமாகப் பார்த்தால் ஆமாம் என்று விடை கூறிவிடலாம். ஆனால் நியூலாந்தின் போக்குகளைச் சற்றே கூர்ந்து கவனிப்பவர்களுக்கு அங்கு அமைதியான (ஆனால் அழுத்தமாக) ஒரு மாற்றம் நடந்து வருவதைப் புரிந்து கொள்ள முடியும். மாறிவரும் தங்கள் மனநிலையை நியூசிலாந்து தெளிவாகவே பதிவு செய்து வருகிறது. இதை அறிய வேண்டுமானால் அந்த நாட்டின் சரித்திரத்தை நாம் முதலில் புரட்டிப் பார்க்க வேண்டும்.

ஆவணங்களின்படி முதலில் நியூசிலாந்தை அடைந்த ஐரோப்பியர்கள், போர்சுக்கீசியர்கள்தான். ஏபெல் டஸ்மான் என்பவர் தலைமையில் இவர்கள் குழு நியூசிலாந்தில் இறங்கியது. உள்ளூர் வாசிகள் கடுமையாகப் போரிட்டனர். போர்த்துகீசியர்களை இவர்கள் ஓடஓட விரட்டினாலும், தங்கள் இனத்தில் ஒருவர் இறந்ததை இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதுவும் துப்பாக்கி குண்டினால் அவர் இறந்து அவர்களுக்குப் பேரதிர்ச்சி. காரணம் துப்பாக்கி என்பது அவர்களுக்கு அறிமுகமாகாத ஒன்று.

பயம் கொண்ட ஐரோப்பியர்களும் அதற்குப் பிறகு பல வருடங்களுக்கு அந்தப் பக்கமாக தலையை வைத்துகூடப் படுக்கவில்லை. 1769ல் பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் குக் ஒரு பெரும் குழுவுடன் கிட்டத்தட்ட நியூசிலாந்து கடற்கரை முழுவதும் காலடி வைத்தார்.

மவோரி இனத்தவர் மிகச் சிறப்பான சமூக அடித்தளங்களோடு வாழ்வதைக் கண்டு வியந்தார். இத்தனைக்கும் அவர்கள் ஏதோ கற்கால நாகரிகத்தினர்போல வாழ்ந்து கொண்டிருந்தனர். சாலைகள் கிடையாது, பானைகள் கிடையாது. ஏன், சக்கரங்களே கிடையாது. அப்படி ஒரு வாழ்க்கை. தவிர வணிகத்தில் சிறிதும் விருப்பம் இல்லாதவர்களாக இருந்தார்கள். எளிதில் கோபப்படுபவர்களாகவும் காட்சியளித்தார்கள். என்றாலும் சமூகம் என்ற விதத்தில் சிறப்பாகவே இணைந்திருந்தார்கள்.

மவோரி என்ற வார்த்தைக்குப் பொருள் ‘இயல்பான’ - அதாவது ‘தனிச்சிறப்பு இல்லாத’ என்பதுதான். இப்படி ஓர் அர்த்தம் கொண்ட வார்த்தையைப் பெருமையாகவே ஏற்றுக் கொண்டிருந்தனர் அந்த மக்கள். தங்கள் எல்லைக்குள் வந்து சேர்ந்த வெளிநாட்டவர்களை ‘பகேஹா’ என்று அவர்கள் குறிப்பிடத் தொடங்கினர்.

டச்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் இங்கு கால் பதித்ததைக் கண்டதும் பிரான்ஸ் நாட்டின் அரசும் நியூசிலாந்து மீது ஒரு கண் பதிந்தது. அதற்குப் பிறகு பல ஐரோப்பியர்களும், வட அமெரிக்கர்களும் மாறி மாறி அங்கே வரத் தொடங்கினர். சுறா பிடிக்க, கடல் மீன் பிடிக்க, வணிகத்துக்கு என்று பலவித காரணங்கள். இந்த மாற்றங்களை மவோரி இனத்தவர் பெரிய எதிர்ப்பு இல்லாமல் ஏற்றுக் கொண்டனர் என்பது வியப்பு.

நிலம்தான் ஏராளமாக இருக்கிறதே. புதியவர்களும் இருந்து விட்டுப் போகட்டுமே. இப்படி நினைத்த மவோரி இனத்தவருக்கு அடுத்த அடி காத்திருந்தது. 1820க்களில் நியூசிலாந்துக்கு வந்திறங்கிய ஐரோப்பிய ஆண்களில் கணிசமானவர்கள் மவோரிப் பெண்களை மணந்து கொண்டார்கள்.

இதில் மவோரி ஆண்களுக்கு எரிச்சல். கலப்பு மணத்தை எதிர்த்தனர் என்பது முக்கிய காரணம் அல்ல! திருமண வயதுப் பெண்களில் பலரையும் ஆங்கிலேய ஆண்கள் திருமணம் செய்து கொள்ளத் தொடங்கியதால் மவோரி இளைஞர்களுக்குக் கல்யாணத்திற்கு இளம்பெண்கள் போதிய அளவில் கிடைக்காமல் போயினர்.

எரிச்சலுக்கு மற்றொரு காரணமும் இருந்தது. அவர்கள் இனப் பெண்களை ஐரோப்பியர்கள் மணந்து கொண்டனர். ஆனால் அவர்கள் இன ஆண்களை மணந்து கொள்ள ஐரோப்பிய இளம் பெண்கள் முன்வரவில்லை. இந்தப் ‘பாரபட்சமான போக்கு’ அவர்களை எரிச்சல் கொள்ள வைத்தது.

பிற ஐரோப்பிய இறக்குமதிகளும் மவோரிக்களைத் திணறடித்தன. உருளை, வெங்காயம், சிக்கன், கோதுமை என்று ஒவ்வொன்றுமே மவோரி கலாச்சாரத்தைப் புரட்டிப் போட்டன. புதிய பயிர்களை விளைவித்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியும் செய்யத் தொடங்கி விட்டார்கள்.

ஆனால் ஐரோப்பியர்கள் எதைக் கொடுத்தாலும் (இறக்குமதி) உடனடியாக அதற்கான பணத்தை எதிர்பார்த்ததை மட்டும் மவோரிக்களால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் பரிசுக் கொள்கைகளில் முதலாவது அடிபடுகிறதே! தவிர பொருளுக்கு பதிலாக வேறு பொருளைத்தானே கொடுக்க முடியும். இவர்கள் பணத்தை எதிர்பார்க்கிறார்களே.

ஒருவழியாக பணத்தின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டார்கள். முக்கியமாக பொருள்களைவிட பணத்தை உறவினர்களிடமிருந்து மறைத்து வைப்பது சுலபம் என்ற கோணம் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது! என்றாலும் கரன்ஸி நோட்டுகளைவிட நாணயங்களைதான் அவர்கள் மிக அதிகமாக விரும்பினார்கள்.

உருளைக்கிழங்கு விளைச்சல் அமோகமாக இருக்கவே, வணிகம் அதிகமாகவே இருந்தது. உருளைக்கிழங்கு வணிகத்துக்கு மவோரி இனத்தவர் முக்கியத்துவம் கொடுத்ததற்கு ஒரு தனித்துவமான காரணமும் இருந்தது.

ஐரோப்பியர்கள் துப்பாக்கிகளை நியூசிலாந்துக்கு அறிமுகப்படுத்தினர். எதிராளியைப் பயப்படுத்த துப்பாக்கிகள் எவ்வளவு பயன்படும் என்பதை அறிந்து கொண்டவுடன் ஒவ்வொரு மவோரி குடும்பமும் தானும் ஒரு துப்பாக்கியை வைத்திருக்க வேண்டுமென்று விரும்பியது. வேடிக்கை என்னவென்றால் எங்கிருந்தோ வந்து சேர்ந்த ஐரோப்பியர்களுக்கு எதிராக துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டுமென்று அவர்கள் நினைக்கவில்லை.

மாறாக அவர்களுக்குள் நடைபெற்ற உட்பூசலில்தான் பங்காளிகளை போட்டுத்தள்ள வேண்டுமென்று நினைத்தார்கள். அதாவது அவர்கள் எண்ணம் இப்படியிருந்தது. தங்களின் விவசாய நிலங்களுக்குப் பங்காளிகள்தானே போட்டியிடுகிறார்கள். வெளிநாட்டினர் காலியாக இருக்கும் நிலத்தில்தானே குடியேறுகிறார்கள்.

இதில் வேதனை என்னவென்றால் துப்பாக்கிக்குப் பதிலாக உருளைக்கிழங்கை ஏற்றுமதி செய்தாக வேண்டிய கட்டாயம். இதற்காக அவர்கள் புதிய அசுத்தமான நிலங்களில் எல்லாம் விவசாயம் செய்யத் தொடங்கினார்கள். இதன் காரணமாக அவர்கள் ஆரோக்கியம் குலையத் தொடங்கியது. அவர்கள் ஆரோக்கியத்தைத் தொலைக்க வேறு சில முக்கிய காரணங்களும் உருவாயின.

(இன்னும் வரும்)



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x