

பெஷாவர் பள்ளியில் தாக்குதல் நடத்துவதற்கான சதித்திட்டம் ஆப்கானிஸ்தானில் உருவானது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவம் நடத்தும் பள்ளியில் தெஹ்ரிக் இ தலிபான் தீவிரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள் உள்பட 148 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையில், இத்தாக்குதலை நடத்துவதற்கான சதித்திட்டம் ஆப்கானிஸ்தானில் உருவானதாகத் தெரியவந் துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியதாவது: இம்மாத தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் 16 தலிபான் தீவிரவாதிகள் பங்கேற்ற கூட்டத்தில், இத்தாக்குதலுக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலிபான் தலைவர் முல்லா பஃஸ்லுல்லா, துணைத் தலைவர் ஷேக் காலித் ஹக்கானி, அந்த அமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள் ஹபிஸ் சயீத், ஹபிஸ் தவுலத், காரி சைபுல்லா, லஷ்கர் இ இஸ்லாம் அமைப்பின் தலைவர் மங்கள் பாக் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
பள்ளியில் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு பெஷாவர் அருகே கைபரில் உள்ள பாரா பகுதியில் பயிற்சி அளித்துள்ளனர். அந்த தீவிரவாதிகளின் பெயர் களும், அவர்களின் ஊர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. பள்ளிக்குச் செல்வதற்காக அவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் உரிமையாளர் யார் என்பது குறித்தும் தெரிய வந்துள்ளது. இஸ்லாமாபாதில் அவரை கைது செய்துள்ள போலீஸார், அவருக்கும் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு உள்ளதா என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.
இந்த தாக்குதல் நடவடிக் கையை ஆப்கானிஸ்தானில் இருந்தபடி சிலர் வழிநடத்தி யுள்ளனர். இவ்வாறு பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர்.