அமெரிக்காவுக்கு எதிராக கடல்வழி அணு ஆயுதத் தாக்குதலுக்கு தயாராகும் சீனா

அமெரிக்காவுக்கு எதிராக கடல்வழி அணு ஆயுதத் தாக்குதலுக்கு தயாராகும் சீனா
Updated on
1 min read

அமெரிக்காவை கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகள் மூலம் மட்டுமே தாக்குதல் நடத்த தயாராக இருந்த சீனா, தற்போது கடல் வழியாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்தத் தயாராகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தங்களது நீர்முழ்கிக் கப்பல்களிலிருந்து கடல் வழியாக தாக்கும் பேலிஸ்டிக் அணு ஆயுத ஏவுகணைகளைத் தயாரிப்பதில் முன்னேறியிருப்பதாக அமெரிக்க-சீனா பாதுகாப்பு மறு-ஆய்வு கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவழித் தாக்குதல் தொடுக்கும் ஏவுகணைகளை அமெரிக்கா சுலபமாக அடையாளம் கண்டு முதல் ஏவுதலிலேயே முறியடிக்கும் திறன் கொண்டுள்ளதால் சீனா தற்போது எளிதில் அழிக்க முடியாத கடல்வழி அணு ஆயுதத் தாக்குதலுக்கான தயாரிப்பு முயற்சியில் இறங்கியுள்ளது.

ஜே.எல்.2 ஏவுகணைகளை சீனா கடல் வழியாக தயார் நிலையில் வைக்க ஏற்பாடுகள் செய்து வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஏவுகணைகள் சுமார் 7,350 கிமீ தூரம் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய திறன் கொண்டது

ஏற்கெனவே அணுத்திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை 2007ஆம் ஆண்டே சீனா அறிமுகம் செய்துள்ளது.

ஆனால் இப்போது ஜே.எல்.2 கடலடி ஏவுகணைகள் அடி ஆழத்திலிருந்தும் கூட தாக்குதல் செய்யும் திறன் கொண்டது. அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா இதனால் சீனாவின் தாக்குதல் வட்டத்திற்கு அருகில் உள்ளது.

ஜப்பானுக்கு தெற்கே கடலிலிருந்து இந்த ஆயுதங்கள் மூலம் தாக்குதல் தொடுத்தால் ஹவாய் இலக்காகும். பசிபிக் கடற்பகுதியில் சீனாவின் சுற்றுப்புற எல்லைகளில் சுமார் 3,60,000 அமெரிக்க கடற்படையினர் நிறுத்தப்பட்டுள்ளமை சீனாவின் கவலைகளை அதிகரித்துள்ளது. இப்பகுதியில் அமெரிக்கக் கடற்படையின் சுமார் 200 கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தப் புதிய கடல்வழி அணு ஆயுத முயற்சியினால் அமெரிக்க அணு ஆயுதத் தாக்குதலிலிருந்து சீனா தன்னை முழுமையாக தற்காத்துக் கொண்டுள்ளதாக அந்த நாட்டு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணைகளின் முக்கிய அம்சங்கள் சில:

அணு நீர்மூழ்கிக் கப்பல்களில் 12 ஏவுகணைத் தொகுதிகள் ஏற்றப்பட்டுள்ளன. இது 7,350 கிமீ வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டது.

ஹவாயின் கிழக்கு கடல் பகுதியிலிருந்து தாக்குதல் நடத்தினால் அமெரிக்க நாடு முழுதையும் இலக்காக்க முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in