

பாகிஸ்தானில் ராணுவ தளபதிகள் பெயரிலும், உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைவர் பெயரிலும் போலியான பேஸ்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ராணுவமும், ஐஎஸ்ஐ அமைப்பும் பாகிஸ்தான் தொலைத் தொடர்பு அமைச்சகம் மற்றும் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளன.
முக்கியமாக பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் ரஹீல் ஷெரீப் பெயரிலும், ஐஎஸ்ஐ தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ரிஸ்வான் அக்தர் பெயரிலும் ஏராளமான போலி பேஸ்புக் கணக்குகள் உள்ளன. இது உண்மையென நம்பி அவர்களிடம் கருத்துகளை பலரும் பகிர்ந்து கொள்கின்றனர்.
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பேஸ்புக்கில் ராணுவ தளபதிகள் யாரும் கணக்கு வைத்திருக்கவில்லை என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் தொலைத்தொடர்பு அமைச்சகத்தால் தங்கள் நாட்டில் பேஸ்புக்கை முற்றிலுமாக தடை செய்ய வேண்டுமானால் முடியும். ஆனால் அதில் உள்ள போலி கணக்குகளை அகற்ற பேஸ்புக் நிர்வாகத்தின் உதவி தேவை என்பதால் ராணுவ தளபதிகள் பெயரில் உலா வருபவர்களை அவர்களால் எளிதில் கட்டுப்படுத்த முடியவில்லை.