Last Updated : 29 Dec, 2014 01:27 PM

 

Published : 29 Dec 2014 01:27 PM
Last Updated : 29 Dec 2014 01:27 PM

மும்பை தாக்குதல் தீவிரவாதி லக்வியின் தடுப்புக் காவலை ரத்து செய்தது இஸ்லாமாபாத் நீதிமன்றம்

மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஜகியுர் ரஹ்மான் லக்விக்கு பாகிஸ்தான் அரசு விதித்த தடுப்புக் காவலை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.

2008-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150-க்கும் மேற் பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவரான லக்வி, இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் நெருக்கடியால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தீவிரவாத தாக்குதல் சம்பவம் நடைபெற்ற நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி ஜாமீன் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. லக்விக்கு ஜாமீன் அளிக்கப் பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து பொது அமைதி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் லக்வி தொடர்ந்து தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை மேலும் 3 மாதங்களுக்கு சிறையில் அடைத்து வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.

இதனை எதிர்த்து இஸ்லாமா பாத் உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவை நேற்று விசாரித்த நீதிபதி நூர் உல் ஹக் கரூஷி, லக்வியின் தடுப்புக் காவலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்

பாக். தூதரிடம் இந்தியா கண்டனம்

தீவிரவாதி லக்விக்கு விதிக்கப்பட்ட தடுப்புக் காவலை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நீக்கியதை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்திடம் மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அப்துல் பாசித்துக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர் வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டார். அங்கு இந்தியாவின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x