Published : 11 Dec 2014 11:21 am

Updated : 11 Dec 2014 11:21 am

 

Published : 11 Dec 2014 11:21 AM
Last Updated : 11 Dec 2014 11:21 AM

புதிதாய்ப் பிறந்த ‘நியூ’சிலாந்து 3

3

கால் பதித்த ஐரோப்பியர்கள் தங்களோடு, ஐரோப்பாவில் பரவியிருந்த பல நோய்களையும் கூடவே கொண்டு வந்தனர். அது போதாதென்று மதுவகைகள், புகையிலை போன்றவற்றையும் பெருமளவில் அறிமுகப்படுத்தினர்.

மவோரி இன இளம் பெண்கள் ‘பகேஹா’ மாலுமிகளுக்கு பாலியல் தொழிலாளிகளாக படைக்கப்பட்டனர். மவோரி இனத்தவர் இப்படிப் பலவிதங்களில் தங்கள் ‘ஆரோக்கியமான வாழ்க்கையைத்’ தொலைத்தனர். இந்த சமயத்தில்தான் பிரிட்டனிலிருந்து வேறொன்றும் நியூசிலாந்தில் இறக்குமதி செய்யப்பட்டது அது கிறிஸ்தவ மதம்.


ஒரு பெரும் படையே பிரிட்டனிலிருந்து நியூசிலாந்துக்கு இறக்கப்பட்டது. அவர்கள் மத போதகர்கள். படிக்க கற்றுத் தருகிறோம், எழுத கற்றுத் தருகிறோம், புதிய முறையில் விவசாயம் செய்ய கற்றுத் தருகிறோம் என்றெல்லாம் தொடங்கி தங்கள் முக்கிய நோக்கத்தையும் கூடவே நிறைவேற்றிக் கொண்டார்கள் - கிறிஸ்தவ மத மாற்றம்.

தவிர ஆங்கில மருத்துவத்தையும் அவர்கள் மதமாற்றத்துக்கான ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கினார்கள். உள்ளூர் நோய்களுக்கு மவோரி இனத்தவர்கள் உள்ளூர் தாவரங்களை மருந்தாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள்தான். ஆனால் புதிதாக வந்து சேர்ந்த ஐரோப்பிய நோய்களுக்கு தீர்வு என்ன என்பது அவர்களுக்குத் தெரியாமல் போனது. ஆங்கில மருத்துவம்தான் இந்த நோய்களுக்குக் குணம் அளித்தது. ‘மருத்துவம் மட்டுமல்ல எங்கள் மதமும் சேர்த்துதான் உங்களை குணப்படுத்தியது’ என்று கிறிஸ்தவ மதபோதகர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதற்குப் பலன் இருந்தது.

1788-ல் நியூ சவுத் வேல்ஸின் (இது ஆஸ்திரேலியாவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ளது. இங்குதான் மொத்த ஆஸ்திரேலியாவின் தலைநகரமான சிட்னி உள்ளது) ஆளுநராகப் பதவி யேற்றார் ஆர்தர் பிலிஃப். நியூ சிலாந்து இனி எங்களுக்குச் சொந்தம் என்றார்.

பிரிட்டிஷ் அரசு உடனே செயல்பட்டது. நியூசிலாந்தில் இருந்த பிரெஞ்சுக் குடியேற்றங்களை நீக்க முனைந்தது. உள்ளூர்வாசிகள் பயந்தனர். “எங்களுக்குச் சுதந்திரம் வேண்டும். எங்களைக் காப்பாற் றுங்கள்” என்று பிரிட்டனை ஆண்ட மன்னன் நான்காம் வில்லிய முக்குக் கடிதம் அனுப்பினார்கள். உள்ளூர் ஐரோப்பியர்கள் மிகவும் சட்டமீறலாக நடந்து கொள்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்தவுடன் பிரிட்டன் ஜேம்ஸ் பஸ்பி என்பவரை ‘பிரிட்டிஷ் ரெசிடென்ட்டாக’ அனுப்பியது.

1816-லிருந்து மவோரி அரசு ஒன்று அமைவதற்காக பல உள்ளூர் மவோரி தலைவர்களும் இங்கிலாந்துக்கு அடிக்கடி சென்று வந்தனர். இதைத் தொடர்ந்து மன்னர் நான்காம் வில்லியம் நியூசிலாந்தின் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1839ல் நியூ சவுத் வேல்ஸ் தேசத்துடன் நியூசிலாந்து இணைக்கப்பட்டது. அதே ஆண்டு லண்டனில் ‘நியூசிலாந்து கம்பெனி’ ஒன்று தொடங்கப்பட்டது. இதன் ஒரே நோக்கம் நியூசிலாந்தை பிரிட்டனின் காலனி ஆக்குவது தான்.

நியூசிலாந்தின்மீது பிரான்ஸ் அரசியல்வாதிகளும் கண்வைத் தனர். இதைத் தொடர்ந்து நியூசிலாந்தில் குழப்பம் விளைந் தது. 1840 பிப்ரவரி 6 அன்று வைடாங்கி உடன்படிக்கை (Treaty of Waitangi) மவோரி தலைவர்களாலும், பிரிட்டிஷ் அரசியின் பிரதிநிதிகளாலும் கையெழுத்திடப்பட்டது.

1840ல் மவோரி மக்கள் பிரிட் டிஷ் ராணியுடன் ஒர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி அரசியின் தலைமையை நியூசி லாந்து ஏற்கும். பிற நாடுகளிலி ருந்து நியூசிலாந்து மக்களை பிரிட்டன் பாதுகாக்கும். மவோரிக் களின் நிலங்களை அவர்களே அனுபவிப்பார்கள்.

1841ல் நியூசிலாந்து தனி பிரிட்டிஷ் காலனி ஆனது.

கொடுத்த வாக்கை பிரிட்டன் நிறைவேற்றவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மவோரிக்களின் நிலங்களைத் தாங்கள் வாங்கிக் கொண்டனர். ‘‘பணம் கொடுக்கிறோம்’’ என்றார்கள். ஆனால் நிலத்தை விற்கத் தயாராக இல்லாதவர்களும் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். 1860க்களில் போர் நடைபெற்றது. நிலங்கள் கட்டாயமாக பிடுங்கப்பட்டன.

பிரிட்டிஷ் மக்கள் ஆயிரக்கணக்கில் நியூசிலாந்துக்குள் நுழைந்தனர். அவர்களுக்குப் புதிய வாழ்வு கிடைக்க பிரிட்டிஷ் அரசு உதவியது. ரயில் பாதைகள் போடப்பட்டன.

1852ல் நியூசிலாந்தின் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதில் மவோரி இனத்தவருக்கு மரண அடி விழுந்தது. இதன்படி அரசியல் தீர்மானங்கள் எடுப்பதில் மவோரி இனத்தவர் விலக்கப்பட்டனர். தானாகவே மவோரி இனத்தவர் எந்த அரசையும் அமைக்கக் கூடாது என்றும் தெளிவாகவே கூறியது அரசியல் அமைப்புச் சட்டம்.

மவோரி இனத்தவர் இனி பிரிட்டிஷ் குடிமக்களாகவே கருதப்படுவார்கள் என்றது அரசியலமைப்புச் சட்டம். அதாவது பழங்குடி மக்கள் இருந்த இடம் தெரியாமல் போவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் பின்பற்றப்பட்டன. பெயர்தான் பிரிட்டிஷ் குடிமக்கள். இதனால் எந்தவொரு நன்மையும் மவோரி இனத்தவருக்குக் கிடைக்கவில்லை.

தொடக்கத்தில் ‘நம் இனத்தின் நிழலை பிரிட்டிஷ்காரர்களுக்கு அளிக்கிறோம். அதன் நிஜத்தை நாம்தான் வைத்துக் கொள்கிறோம்’ என்றெல்லாம் கூறி வெற்றிப் புன்னகை பூத்துக் கொண்டிருந்தார்கள் மவோரி இனத்தலைவர்கள். ஆனால் தொடர்ந்த நிகழ்ச்சிகள் நேரெதிராக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்.

1858-ல் கிங் இயக்கம் என்ற ஒன்று உருவானது. மவோரி இனத்தவர்கள் உருவாக்கிய இயக்கம் இது. இதற்குத் தலைவராக அந்த இனத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே இருக்க முடியும். ஆனால் இதனாலெல்லாம் குறிப்பிடத்தக்க பலன் எதுவுமே இல்லாமல் போனது.

அதேசமயம் ஆங்கிலேய மக்கள் நியூசிலாந்தில் அதிகமானதையொட்டி பல வசதிகளை நியூசிலாந்துக்கு உருவாக்கத் தொடங்கியது ஆங்கிலேயே அரசு. 1860லிருந்து 1881 வரை மட்டும் நியூசிலாந்தில் உயர்ந்த ஐரோப்பியர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு லட்சம். (அதற்கு முன் வெறும் 60,000 பேர்தான் இருந்தனர்).

(இன்னும் வரும்)


தொடர்ஜி.எஸ்.எஸ்வரலாற்று தொடர்நியூசிலாந்து வரலாறுமாவோரி இன மக்கள்நியூசிலாந்து பழங்குடிபிரிட்டிஷ் ஆதிக்கம்பிரிட்டிஷ் அட்டூழியம்கிறிஸ்துவ மதமாற்றம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author