Last Updated : 20 Dec, 2014 10:12 AM

 

Published : 20 Dec 2014 10:12 AM
Last Updated : 20 Dec 2014 10:12 AM

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 5

ஷேர் அலியின் மகன் யாகூபின் ஆட்சியைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் தலைமையை ஏற்றுக் கொண்டவர் அப்துர் ரஹ்மான். இவர் தலைமை பிரிட்டனுக்கு மிகவும் வசதியாக இருந்தது. இவர் உள்ளூரிலும் செல்வாக்கு பெற்றிருந்தார். பிரிட்டனின் தலைமையையும் முழுமையாக ஏற்றுக் கொண்டிருந்தார். பிரிட்டனுக்கு வேறென்ன வேண்டும்?

ஆனால் அப்துர் ரஹ்மானின் சிறப்பு ஒன்றையும் சொல்லத்தான் வேண்டும். ஆப்கானிஸ்தானை நவீனமயமாக்கினார். உள்நாட்டுக் கலவரங்களை, கடுமையான தண்டனை மூலம் அடக்கினார். பஷ்டூன் இனத்தினர் ஒரே பகுதியில் மிக அதிகமாக இருப்பதால் ஒருங்கிணைந்த கலவரங்களை ஏற்படுத்துகிறார்கள் என்று நினைத்தார். எனவே அந்த இனத்தவரை கட்டாயப்படுத்தி நாட்டின் பல இடங்களில் பரவலாகத் தங்க வைத்தார். அவர்களின் ஒருமித்த வலிமை குறைந்தது.

ஐரோப்பாவிலிருந்து நிறைய இயந்திரங்களை இறக்குமதி செய்தார். ஆப்கானிஸ்தானில் சிறு தொழில்கள் வளரத் தொடங்கின. திறமையான மருத்துவர்கள், பொறியாளர்கள், விவசாய வல்லுநர்கள் போன்றவர்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்தார். ஆப்கானிஸ்தானின் வளம் பெருகியது.

ஆனால் ஆப்கானிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை என்பது அவர் கையில் இல்லாமல் போனது. இதைத் தீர்மானித்ததெல்லாம் வெளி சக்திகள்தான். மத்திய ஆசியாவில் ஊடுருவலைத் தொடங்கியது ரஷ்யா. 1884-ல் மெர்வ் ஒயாசிஸ் என்ற ஆப்கானியப் பகுதிக்கருகே ரஷ்ய ராணுவம் குவியத் தொடங்கியது. பஞ்ச்தேவ் என்ற பகுதியைச் சுற்றியிருந்த பல சிறு சிறு பகுதிகள் சோவியத் வசம் சென்றன.

அதே சமயம் பிரிட்டன் இதைப் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் வெறுப்போடு அப்துர் ரஹ்மான் “என் இருபது வருட ஆட்சிக் காலத்தில் என் நாடு இரண்டு சிங்கங்களுக்கிடையே சிக்கிக் கொண்ட ஆடு போலத்தான் இருந்தது. ஆப்கானிஸ்தான் முழுமையாக உருக்குலையாமல் இருந்ததே பெரிய விஷயம்’’ என்றார்.

இவர் காலத்தில்தான் டூராண்டு எல்லைக்கோடு உருவாக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானையும், இந்தியாவையும் பிரிக்கும் கோடு இது (இந்தியா என்று இங்கே கூறப்படுவது இன்றைய பாகிஸ்தானையும் சேர்த்துதான்) அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் வெளியுறவுச் செயலரின் பெயர் சர் மார்டிமர் டூராண்டு. இவர் இந்த 2460 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எல்லைக் கோடை வரையறுத்ததால் அவர் பெயரே இதற்குச் சூட்டப்பட்டது.

அப்துர் ரஹ்மான் தன் மூத்த மகன் ஹபிபுல்லாவை தனது வாரிசாக செதுக்கிச் செதுக்கி வார்த்தெடுத்தார். ஆனால் ஹபிபுல்லா அடிமை வாழ்க்கை வாழ்ந்த ஒரு பெண்ணின் மகன் என்பதால், அவன் அரியணை ஏறக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் தந்தையின் விருப்பம், ராணுவத்தின் முழு ஆதரவு ஆகிய இரண்டுமே ஹபிபுல்லாவின் தரப்பில் இருந்ததால் அவர் அடுத்த வாரிசாக அரண்மணை கட்டிலில் அமர முடிந்தது.

முதலாம் உலகப் போரின்போது ஆப்கானிஸ்தான் நடுநிலை வகித்தது. இத்தனைக்கும் துருக்கியை ஆண்ட சுல்தான் தன்பக்கம் சேர ஹபிபுல்லாவை மிகவும் கட்டாயப்படுத்தினார். ஆனால் பலன் இல்லை. 1919 பிப்ரவரி 20 அன்று வேட்டையாடச் சென்றபோது ஏதோ மிருகம் தாக்கி ஹபிபுல்லா கொல்லப்பட்டார்.

அடுத்து ஆப்கானிஸ்தான் ஹபிபுல்லாவின் மகன் அமானுல்லாவின் வசம் வந்தது. தான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஆப்கானிஸ்தானை ஒரு முழு சுதந்திர நாடு என்று பிரகடனம் செய்தார் அமானுல்லா கான். பிரிட்டனால் இந்தப் போக்கை ஏற்க முடியவில்லை.

மூன்றாவது ஆங்கிலேய – ஆப்கானியப் போர் மே 1919-ல் நடைபெற்றது. சுமார் ஒரு மாத காலம் நடைபெற்ற இந்தப் போரில் பிரிட்டனின் பிடியிலிருந்து ஆப்கானிஸ்தானை முழுவதுமாகவே விடுவித்தார். இறுதிக் கட்டப் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

‘வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை உங்களுக்குச் சுதந்திரம் தரத் தயார். இதை எழுத்தளவில்கூட ஒத்துக் கொள்வோம்’ என்று கூட பிரிட்டன் அறிவித்தது. ஆனால் டூராண்டு எல்லைக்கோட்டுக்கு இருபுறமும் வசித்த பஷ்டூன் இனத்தவர் மீதான உரிமையை ஆப்கானிஸ்தானுக்கு விட்டுக் கொடுப்பதில் பிரிட்டனுக்கு விருப்பமில்லை.

அமானுல்லா கான் தன் நாடு சுதந்திரம் அடைந்து விட்டது என்று அறிவித்ததோடு நின்றுவிடாமல் பல்வேறு நாடுகளுக்கும் ‘’எங்கள் தேசத்துடன் நீங்கள் தூதரக உறவைத் தொடங்க வேண்டும்’’ என்று தூது அனுப்பினார். இந்த நாடுகளில் அவர் தனது குழுவை முதன்முதலாக அனுப்பியது சோவியத் யூனியனுக்குதான்.

போல்ஷெவிக் புரட்சிக்குப் பிறகு சோவியத் யூனியனுக்கு வந்த முதல் தூதரகக் குழு ஆப்கானிஸ்தானுடையதுதான். பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் நடத்தும் போராட்டத்துக்கு தன்னால் ஆன எல்லா உதவிகளையும் செய்யத் தயார் என்று அறிவித்தது சோவியத். ஆப்கானிஸ்தானும், சோவியத் யூனியனும் இணைந்திருந்த தொடர்ந்த வருடங்கள் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

தூதரக உறவு தொடங்கியது. இருநாடுகளுக்குமே ஒன்றின் சார்பு நிலை மற்றொன்றுக்கு தேவைப்பட்டது. சில உரசல்கள் எழத்தான் செய்தன. அமு தார்யாவுக்கு மறுபுறமிருந்த சில பகுதிகளை சோவியத் யூனியன் பல வருடங்களுக்கு முன் கைப்பற்றிக் கொண்டிருந்தது. புதிய தூதரக உறவைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளை ஆப்கானிஸ்தானுக்கே மாஸ்கோ தலைமை திருப்பியளித்துவிடும் என்று எதிர்பார்த்தது ஆப்கானிஸ்தான். சோவியத் இது தொடர்பாக மெளனத்தை மட்டுமே பதிலாகத் தந்தது.

என்றாலும் பிரிட்டிஷ் தொடர்பை முழுவதுமாக துண்டித்துக் கொண்ட ஆப்கானிஸ்தான் சோவியத் யூனியனைப் பெரிதும் நம்பியது. ஆப்கானிஸ்தானும், சோவியத் யூனியனும் மே 1921 அன்று ஒரு நட்பு உடன் படிக்கையில் கையெழுத்திட்டன. ஆப்கானிஸ்தானில் சோவியத் விமானங்கள் இறங்கின. பிரிட்டன் பதற்றம் கொண்டது. பிரிட்டனை எதிர்த்த இந்தியப் புரட்சியாளர்களுக்கு காபூலில் அடைக்கலம் கிடைத்தது. பிரிட்டனின் பதற்றம் மிக அதிகமானது.

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x