

அமெரிக்காவின் சிஐஏ அமைப்பு விசாரணையின் போது மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் நட்பு நாடுகள் உட்பட ஏராளமான நாடுகள் அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் தீவிர வாதிகள் என்று சந்தேகிகப்படுபவர்களிடம் அமெரிக்க விசாரணை அமைப்பான சிஐஏ மிகக் கடுமையான விசாரணை முறைகளை கையாண்டுள்ளது. அதில் பல்வேறு மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் இருந்தன. கைதிகள் கடுமையாக சித்தர வதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்று தெரியவந்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற செனட் அவையின் குழுவினர் அளித்த விசாரணை அறிக்கையில் இத்தகவல்கள் தெரியவந்துள்ளன.
சிஐஏ விசாரணையில் சில தவறுகள் நடந்துள்ளன என்பதை அமெரிக்க அதிபர் ஒபாமா உட்பட உயரதிகாரிகள் பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அமெரிக்கா மீதான குற்றச் சாட்டு தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் சாகி கூறு கையில், எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை வெளிப் படையாக ஒப்புக் கொண்டு, எங்களை திருத்திக் கொள்ளவே விரும்புகிறோம். அதைத்தான் வெளிப்படையாக செய்து வருகிறோம்.
அமெரிக்கா வெளிப்படையாக உண்மைகளை வெளியிட்டதை போல பிற நாடுகளும் தங்கள் விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளை தெரிவித்தால் அதனை வரவேற்போம் என்றார்.
இதே விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த வெள்ளை மாளிகை ஊடகத் துறை செயலாளர் ஜான் ஏர்னெஸ்ட், சர்வதேச அளவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கும் தகுதியை அமெரிக்கா இழந்து விட்டது என்று கூறப்படுவதை மறுத்தார்.
இரட்டை கோபுர தாக்குதல் நிகழ்ந்த (ஜார்ஜ் டபிள்யூ புஷ் அதிபராக இருந்த) கால கட்டத்தில் சில கடுமையான விசாரணை முறைகள் இருந்திருக்கலாம். எனினும் நியாயமற்ற விசாரணை முறைகளை தடை செய்வதில் ஒபாமா உறுதியாக இருக்கிறார்.அமெரிக்கா மீதான நம்பகத்தன்மை காக்கப்படும் என்றார்.