Last Updated : 06 Dec, 2014 11:39 AM

 

Published : 06 Dec 2014 11:39 AM
Last Updated : 06 Dec 2014 11:39 AM

பிறவிப் பகைவர்கள் பாலஸ்தீனம், இஸ்ரேல் 11

யாசர் அராபத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்த மேலை நாடுகள் முகம்மது அப்பாஸுடன் பேச்சு வார்த்தை நடத்த சம்மதித்தன. இந்த ஏற்பாட்டில் யாசர் அராபத்துக்கு முழு சம்மதமில்லை. என்றாலும் மேலை நாடுகள் தொடர்ந்து பிடிவாதம் காட்டியதால் வேறுவழியின்றி இதற்குச் சம்மதித்தார்.

2003 மார்ச்சில் அப்பாஸை ’பாலஸ்தீன தேசிய சக்தி’ என்ற அமைப்பின் தலைவர் ஆக்கினார் யாசர் அராபத். ஆனால் அடுத்த ஆண்டே இருவருக்குமிடையே பல கருத்து மோதல்கள் ஏற்பட்டன. எந்த அளவுக்கு, யார் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது என்பதில் பிரச்சினைகள் வெடித்தன.

மேலை நாடுகளும், இஸ்ரே லும் “உங்கள் அதிகார மனப் பான்மையில் அப்பாஸுக்குரிய உரிமையைக் கொடுக்க மாட்டேன் என்று மறுக்கிறீர்கள்” என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டின. போதாக்குறைக்கு ‘எனக்குரிய அதிகாரம் கொடுக்க வில்லை என்றால் நான் ராஜினாமா செய்கிறேன்’ என்று அறிவித்த அப்பாஸ், பாலஸ்தீன பாராளுமன்றத்துக்கும் இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்றார்.

இதைத் தொடர்ந்த நாட்களில் யாசர் நோய்வாய்ப்பட்டு பாரிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.

யாசர் அராபத் இறந்தபிறகு 2005 ஜனவரியில் நாட்டின் (Palestinian National Authority) அதிபராக மக்கள் அப்பாஸைத் தேர்ந்தெடுத்தனர். 60 சதவிகிதத் திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார் அப்பாஸ். ‘இந்த வெற் றியை அராபத்தின் ஆத்மாவுக் குக் காணிக்கையாக்குகிறேன். இந்த வெற்றி நமது மக்கள், நமது தியாகிகள் மற்றும் 11,000 சிறைக் கைதிகளுக்கும் உரித்தானது’’ என்றார். கூடவே இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதம் தாங்கும் செய்கையை ஒரு போதும் நியாயப்படுத்தக் கூடாது என்பதில் குறியாக இருந்தார்.

இஸ்ரேலியப் பிரதமர் ஏரியல் ஷரோனும், பாலஸ்தீன தலைவர் முகம்மது அப்பாஸும் இணைந்து ‘வன்முறைகளின் வேரறுப்போம்' என்று அறிவித்ததன் தொடர்ச்சியாக காஸாவில் அமைந்துள்ள 21 யூதக் குடியிருப்புகளில் ஐந்து காலி செய்யப்பட்டன. மேற்குக் கரையில் உள்ள ஐந்து சிறு நகரங்களை உடனடியாக பாலஸ்தீனர்களுக்கு அளித்து விடுவதாகவும் 500 பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்வ தாகவும் இஸ்ரேல் கூறியது

இஸ்ரேலிய ராணுவம் வெளி யேறிய பிறகு ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள், இடையில் யூதர்கள் ஆக்கிரமித்திருந்த குடியேற்றங்களில் உற்சாகக் கூக்குரலோடு மறுபிரவேசம் செய்தார்கள். மசூதிகளில் மீண்டும் மீண்டும் குரான் ஓதப்பட்டது. வாணவெடிகள் சீறிப்பாய்ந்தன.

இப்போதைய நிலை என்ன? அதைப் பார்ப்பதற்குமுன் இப்போது அடிக்கடி எழுப்பப்படும் ஒரு முக்கியமான கேள்விக்கான விடையை அறிந்து கொள்வோம்.

பாலஸ்தீனம் ஒரு நாடா?

நவம்பர் 2012ல் ஐ.நா.பொதுச்சபை பாலஸ்தீனத்துக்கு ‘அப்சர்வர் ஸ்டேட்’ (Observer State) என்ற அந்தஸ்தைக் கொடுத்தது. பாலஸ்தீனக் கொடி முதன்முறையாக ஐ.நா.சபை வளாகத்தில் பறந்தது.

அப்படியானால் பாலஸ்தீனம் ஒரு நாடு இல்லையா?

‘‘ஒரு புதிய நாட்டிற்கான அங்கீகாரம் என்பது பிற நாடுகள் அதை அளிக்கத் தயாரா இல்லையா என்பதைப் பொறுத்தது. தூதரக உறவை புதிய நாட்டுடன் வைத்துக் கொள்ள பிற நாடுகள் தயாராகும்போது நாடு என்ற அந்தஸ்து அதற்குக் கிடைக்கும் எனலாம். இப்படிப் பார்க்கும்போது ஐ.நா. ஒரு நாடும் அல்ல, அரசும் அல்ல. எனவே இந்த அங்கீகாரத்தை வழங்க முடியாது’’. இப்படி வேறு யாரோ கூறவில்லை. ஐ.நாவே இப்படி அறிவித்தது.

ஆனால் சில சமயம் இது உண்மையல்ல என்று தோன்றுகிறது. கொசோவோ என்பதை ஒரு நாடாக பிற நாடு கள் அங்கீகரித்து விட்டன. ஆனால் ஐ.நா.சபை அதை உறுப் பினராக்கிக் கொள்ளவில்லை.

அரிதாக, முழுச் சுதந்திரமும் கிடைப்பதற்கு முன்பாகக் கூட சில நாடுகளுக்கு உறுப்பினர் அந்தஸ்தை ஐ.நா. அளித்திருக் கிறது. நம் நாடே கூட இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. 1945லேயே இந்தியா ஐ.நா.வின் உறுப்பினராகி விட்டது. (அதற்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் நாம் சுதந்திரம் பெற்றோம்).

அப்சர்வர் ஸ்டேட் என்கிற அந்தஸ்தை ஐ.நா.சபை பாலஸ் தீனத்துக்கு அளித்தவுடன் அமெரிக்கா இது குறித்து என்ன கூறப்போகிறது என்று ஊடகங்கள் காத்திருக்க, அமெரிக்கா மெளனத் தையே விடையாகத் தந்தது.

கேள்விகளால் நெருக்கிய பிறகு, ஐ-நா.வுக்கான அமெரிக்கத் தூதர் சூசன் ரைஸ் ‘பாலஸ்தீனம் இன்னமும் ஒரு நாடாக அங்கீ கரிக்கப்படவில்லை என்பதைத் தான் இந்த அறிவிப்பு சுட்டிக் காட்டுகிறது’’ என்றார்.

ஐ.நா.சபையின் உறுப்பினராக வேண்டும் என்றால் அதற்கு ஐந்து தகுதிகள் வேண்டுமென்று சர்வதேச நீதிமன்றம் 1948ல் கருத்து தெரிவித்தது. அது ஒரு நாடாக இருக்க வேண்டும். அமைதியை விரும்புவதாக இருக்க வேண்டும். ஐ.நா.சபையின் சட்டங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவற்றின்படி செய்ய வேண்டிய காரியங்களை அது செய்யும்வகையில் இருக்க வேண்டும். இவற்றை விருப்பத்துடன் செய்ய வேண்டும். (அதாவது பிற நாடுகளின் கட்டயாத்தினால் மட்டுமல்ல).

பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கலாமா வேண் டாமா என்ற கேள்வி எழுந்தபோது, இந்த ஐந்து நிபந்தனைகளில் சில பாலஸ்தீனத்துக்குப் பொருந்தவில்லை என்று ஐ.நா.பாதுகாப்புக் குழு கருத்து தெரி வித்தது. முக்கியமாக ‘அமைதியை விரும்பும் நாடாக இருக்க வேண்டும்’ என்ற நிபந்தனையும், தன் எல்லைப் பகுதிகள்மீது அதற்குப் பிடிமானம் இல்லாமல் இருப்பதும் பாலஸ்தீனம் தனி நாடாக ஏற்றுக்கொள்ளப்பட தடைகளாக உள்ளனவாம். அதனால்தான் ‘அப்சர்வர் ஸ்டேட்’ என்ற அரைகுறை அந்தஸ்தை பாலஸ்தீனத்துக்கு வழங்கியது ஐ.நா.சபை.

‘அப்சர்வர் ஸ்டேட்டாக’ இருப்ப தால் என்ன பயன்? ஐ.நா.வின் ஏஜென்ஸிக்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் பாலஸ்தீனமும் இணைந்து பணியாற்றலாம்.

தனக்கென்று ஓர் அரசு, வரையறுக்கப்பட்ட எல்லை, நிரந்தர மக்கள் தொகை, பிற நாடுகளுடன் வெளியுறவு விவகாரங்களில் ஈடுபடும் திறன் - இந்த நான்கும் இருந்தால் பொதுவாக ஒரு பகுதி நாடாக ஏற்றுக் கொள்ளப்படும். ஆக பாலஸ்தீனம் அங்கீகாரத்துக்காக ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x