Published : 05 Dec 2014 10:20 AM
Last Updated : 05 Dec 2014 10:20 AM

உலக மசாலா: 77 வயது பளு தூக்கும் வீராங்கனை

77 வயது வில்லி மர்பி பளு தூக்கும் வீராங்கனை. 47 கிலோ எடை கொண்ட மர்பி, 113 கிலோ எடையைத் தூக்கி, உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். ஜார்ஜியாவில் நடைபெற்ற போட்டியில் பட்டத்தை வென்ற மர்பி, வாரத்துக்கு மூன்று நாட்கள் ஜிம்முக்குச் சென்று, உடலைத் தயார் செய்துகொள்கிறார். ‘வயதானவள் என்று என்னைச் சக்கர நாற்காலியில் யாரும் உட்கார வைத்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்தப் போட்டிகளில் பங்கேற்கிறேன். உடலைப் பாதுகாக்கிறேன். எந்தக் கடினமான வேலையையும் நான் செய்துவிடுவேன். பனிக்கட்டிகளில் சிக்கும் என் காரைக்கூட தனியாகவே மீட்டுவிடுவேன். வயது எனக்கு ஒரு தடையல்ல’ என்கிறார் மர்பி.

வயசானவங்களுக்கு மட்டுமில்ல, இளைஞர்களுக்கும் நீங்க ரோல் மாடல்!

ஜப்பானில் வசிக்கும் 31 வயது யாஸ்சன், வித்தியாசமான முறையில் தன் காதலைத் தெரிவிக்க எண்ணினார். ‘மேரி மி’ என்ற வார்த்தைகளோடு, இதயத்தில் அம்பு குத்துவது போல வரைபடத்தை ஜிபிஎஸ் மூலம் கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்தார். வேலையிலிருந்து விலகினார். ஜப்பானில் உள்ள காடுகள், மலைகள் சூழப்பட்ட பகுதிகளில் சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர்களைக் கடக்கத் திட்டமிட்டார்.

தான் செல்லும் பாதையை ஜிபிஎஸ் உதவியுடன் புகைப்படங்களாக எடுத்துவைக்கும் பொறுப்பை, காதலியிடம் ஒப்படைத்திருந்தார். பயணம் ஆரம்பமானது. பெரும்பாலும் கால்நடைப் பயணம்தான். கார், படகு போன்றவற்றில் சில பகுதிகளைக் கடந்தார். 6 மாதப் பயணத்தின் முடிவில், அவர் நினைத்தது போலவே வார்த்தைகளும் அம்புக்குறியோடு கூடிய இதயமும் உருவாகிவிட்டன. இதை ஏழு நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவாக மாற்றி வெளியிட்டார். இந்தப் புதுமையான முயற்சி சூப்பர் ஹிட்டாகிவிட்டது.

இதுக்குப் பிறகும் அந்தப் பெண் யாஸ்சனை ஏத்துக்க மறுத்திருப்பாரா என்ன!

சீனாவைச் சேர்ந்த ஜு பிங்க்வான் காமிக் புத்தகங்களின் பிரியர். ஒவ்வொரு சூப்பர் ஹீரோ உடையையும் வாங்கி சேகரித்து வைத்திருக்கிறார். தற்போது ஜு தானே சூப்பர் ஹீரோ உடைகளைத் தயாரித்து வருகிறார். சாங்சுவான் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம் பயின்று வரும் ஜு, கடந்த இரண்டு ஆண்டுகளாக சூப்பர் ஹீரோ ஆடைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

இந்த ஆடைகள் துணியால் செய்யப்பட்டவை அல்ல. ஒருவித பிளாஸ்டிக் பொருளால் வடிவமைக்கப்பட்டவை. அச்சு அசலாகத் திரைப்படத்தில் வரும் பேட்மேன், சூப்பர்மேன் போன்றவர்களின் ஆடைகளை ஒத்திருக்கும். சின்ன வயதில் சூப்பர்மேனாக ஆக வேண்டும் என்று நான் கனவு கண்டிருக்கிறேன். என்னால் அதை அப்போது நிறைவேற்றிக்கொள்ள இயலவில்லை. எனக்குக் கிடைக்காத வாய்ப்பை மற்ற குழந்தைகளுக்கு வழங்கவே ஆடைகளை உருவாக்கி வருகிறேன் என்கிறார் ஜு.

என்னதான் ஆடைகளை அணிந்தாலும் சூப்பர் ஹீரோவாக முடியாதுங்கிற உண்மையைத்தான் முதல்ல குழந்தைகளுக்குச் சொல்லித்தரணும்…

டேவிட் ரிச்சர்ட்ஸ் வித்தியாசமான முறையில் கிறிஸ்துமஸைக் கொண்டாடி வருகிறார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் டேவிட், வழக்கறிஞர். இவருக்கு கிறிஸ்துமஸ் விளக்குகளின் மீது அலாதியான விருப்பம். விதவிதமான விளக்குகளால் வீட்டை அலங்காரம் செய்து அசத்தி விடுவார். கடந்த ஆண்டு 5 லட்சம் விளக்குகளை வைத்து அலங்காரம் செய்தார். 12 ஆயிரம் மக்கள் வந்து பார்வையிட்டுச் சென்றார்கள். கின்னஸ் புத்தகத்திலும் இந்தச் சாதனை இடம்பெற்றது. இந்த ஆண்டு 10 லட்சம் விளக்குகளை வைத்து அலங்காரம் செய்திருக்கிறார் ரிச்சர்ட். பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுச் செல்கிறார்கள்.

இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை குழந்தைகள் நல நிதிக்கு அளித்துவிடுகிறார் ரிச்சர்ட். அவருடைய ஒரு வயது மகன் இறந்து போனதால், அவன் நினைவாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி திரட்டிக் கொடுக்கிறேன் என்கிறார் ரிச்சர்ட். கண்களுக்கு விருந்தளிக்கும் இந்தக் கிறிஸ்துமஸ் அலங்காரம், நல்ல திட்டத்துக்கும் பயன்படுவதால் மக்களின் ஆதரவு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

எந்த விதத்தில் நல்லது நடந்தாலும் வரவேற்க வேண்டியதுதான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x