

தெஹ்ரிக் - இ -தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்ற பெயரில் செயல்படும் தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஆப் கானிஸ்தான் எல்லையில் வடக்கு வஜிரிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இது பழங்குடியினர் வசிக்கும் பகுதி. ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், அமெரிக்கா தலைமையிலான படைகளுடன் பாகிஸ்தான் இணைந்தது முதல், இத் தலிபான்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர்.
கடந்த 2007-ம் ஆண்டு வரை இத்தீவிரவாத குழுக்கள் ஒரே அமைப்பாக இணைந்து செயல்பட்டதில்லை. இப்போது அனைத்து தீவிரவாதக் குழுக்களும் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளன. சமீபகாலமாக பாகிஸ்தான் ராணுவமும், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களும் தீவிரவாதிகள் மீது தாக்குதலைத் தொடங்கியபின் மோதல் அதிகரித்துள்ளது.
தெஹ்ரிக் - இ -தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் தலை வர் முல்லா பஸுல்லா. இந்த அமைப்புதான் 2012-ல் கல்வி உரிமைப் போராளி சிறுமி மலாலா யூசுப்ஸாய் மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் அரசைத் தூக்கியெறிந்து விட்டு, இஸ்லாமிய சட்டப்படியான ஆட்சியை நிறுவுவதுதான் இந்த அமைப்பின் நோக்கம். தெஹ்ரிக் - இ -தலிபான் பாகிஸ்தான் அமைப்பு, ஆப்கானிஸ்தானில் உள்ள ஆப்கன் தலிபான்களுடனும், அல்- காய்தா தீவிரவாதிகளுடனும் கூட்டணி அமைத்துள்ளது.
இஸ்லாமிய சட்டப்படி ஆட்சி என்ற தங்களின் இலக்கை அடைவதற்காகவே, பாகிஸ்தான் ராணுவம், அரசுத் துறைகள், பொதுமக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதுவரை வன்முறையால் மட்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி மீது நடத்திய தாக்குதல் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த தாக்குதல்களிலேயே மிக மோசமானது. வடக்கு வஜிரிஸ்தானில் தீவிரவாதிகளின் மீது ராணுவம் நடத்தி வரும் தாக்குதலால் அப்பகுதியிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர்.