Last Updated : 05 Dec, 2014 10:56 AM

 

Published : 05 Dec 2014 10:56 AM
Last Updated : 05 Dec 2014 10:56 AM

பிறவிப் பகைவர்கள் – பாலஸ்தீனம், இஸ்ரேல் 10

பத்திரிகையாளர் ஷெரீன் சலமாவுக்கு யாசர் அராபத்தைப் பேட்டி காண சுலபத்தில் அனுமதி கிடைக்கவில்லை.தொடர்ந்து சில வாரங்கள் அவர் இதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது யாசர் அராபத்தின் வளாகம் மூன்று முறை இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டது. அவர் தங்கியிருந்த இடத்தைத் தவிர சுற்றிருந்த பல பகுதிகளும் தரைமட்டமாயின. பாலஸ்தீனர்கள் அந்த வீட்டைச் சூழ்ந்து கொண்டு ஓர் அரண் போலச் செயல்பட்டனர்.

அவர்கள் யாசர் அராபத்தை ஒரு தந்தை போலக் கருதியதைத் தன்னால் உணர முடிந்தது என்றார் ஷெரீன். ஒரு வன்முறையாளராக மட்டுமே யாசரை எண்ணியிருந்த அவருக்கு யாசரின் மறுமுகம் புலப்படத் தொடங்கியது. 74 வயது முதியவர் ஒருவர் இப்படிப்பட்ட சூழலைத் தாக்குப் பிடிப்பதை ஒரு பெரும் சவாலாகவே கருதினார் அந்தப் பத்திரிகையாளர்.

ஒரு மாதக் காத்திருப்புக்குப் பின் பேட்டிக்கான வாய்ப்பு கனிந்தது. தனியொரு மனிதராக பாலஸ்தீனர்களுக்கு யாசர் அராபத் ஓர் அடையாளம் கொடுத்ததை ஷெரீனால் உணர முடிந்தது. அடுத்த 15 நாட்களில் (2004 அக்டோபரில்) யாசர் அராபத்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. குமட்டல், வாந்தி என்று தொடங்கியது உடல்பாதிப்பு. துனீசியா, எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளிலிருந்து மருத்துவர்கள் வந்து அவர் உடல்நிலையை சோதித்தார்கள்.

உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கருதினார்கள். இஸ்ரேல், பாலஸ்தீன மருத்துவமனைகள் வேண்டாம் என்பதில் ஒருமித்த கருத்து நிலவியது. பதற்றமான சூழல், பாதுகாப்புக்குக் கேடு என்பவைதான் முக்கியக் காரணங்களாகக் கருதப்பட்டன.

ஃபிரான்ஸிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப் பட்டார். அது பாரிஸின் புறநகர்ப் பகுதி ஒன்றில் அமைந்திருந்தது. சேர்த்த சில நாட்களிலேயே அவரது சிறுநீரகங்கள் பழுதடைந்தன. நவம்பர் 3 அன்று அவர் மெல்ல மெல்ல கோமா கட்டத்தை அடைந்தார். ஃபிரான்ஸ் சென்றிருந்த பாலஸ்தீன அதிகாரிகளுக்கும் யாசர் அராபத்தின் மனைவி சுஹாவுக்குமிடையே கருத்து வேற்றுமைகள் வளர்ந்தன.

‘’அபு அம்மரை (யாசர் அராபத்தை) உயிரோடு புதைக்கப் பார்க்கிறார்கள்’’ என்று அறிவித்தார் சுஹா. யார்? அதைச் சொல்லவில்லை அவர்! பிரான்ஸ் நாட்டு சட்டப்படி நோயாளி குறித்த நிலைமையை மருத்துவர்கள் பிறரிடம் விவாதிக்கக்கூடாது. அப்படியே தெரிவித்தாலும் நோயாளியின் நெருங்கிய உறவினரிடம் மட்டும்தான் அது குறித்து தெரிவிக்கலாம், விவாதிக்கலாம். எனவே அராபத் உடல்நிலைகுறித்த விவரங்களை அவர் மனைவியிடம் மட்டுமே தெரிவித்துக் கொண்டிருந்தனர் மருத்துவர்கள். இதில் அதிகாரிகளுக்கு கடும் அதிருப்தி. சுஹா தகவல்களை வடிகட்டித்தான் தங்களுக்கு அளிக்கிறார் என்ற குற்றம்சாட்டினர்.

2004 நவம்பர் 11 அன்று யாசர் அராபத் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. கடும் மாரடைப்பு என்று காரணம் கூறினார்கள் மருத்துவர்கள். ஆனால் மர்மம் தொடர்ந்தது.

கல்லீரல் பாதிக்கப்பட்டு ‘சிரோஸிஸ்’ என்ற நிலை அவருக்குத் தோன்றியதாக சில மருத்துவ வட்டாரங்கள் கூறின. ஆனால் இதை வெளியே தெரியாமல் மறைத்து விட்டார்கள். யாசர் அராபத் மது அருந்தியதில்லை. சிரோஸிஸ் நிலை மதுவினால் மட்டும்தான் உண்டாகும் என்பதுமில்லை. என்றாலும் அதை மதுவுடன் சம்பந்தப்படுத்தியே பலரும் நினைப்பதால் எதிரணியினர் (இஸ்ரேல் மட்டுமல்ல ஹமாஸும்தான்) இதை ஒரு வாய்ப்பாகக் கருதி பிரச்சாரம் செய்து விடக் கூடாது என்பதனால் இந்த விவரத்தை வெளியே வரவிடாமல் இருக்க முயற்சித்ததாக ஒரு வதந்தி பரவியது. அவரது ரத்தத்தில் புதிரான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

பல வருடங்களுக்குப் பிறகு யாசர் அராபத்தின் எஞ்சிய உடலைச் சோதித்த சுவிட்சர்லாந்து மருத்துவர்கள் அவர் உடலில் அதிக அளவு போலோனியம் காணப்பட்டதாக தெரிவித்தனர். போலோனியம் என்பது மிக அதிக அளவு கதிரியக்கம் கொண்ட ஒரு நஞ்சு. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இஸ்ரேலின் சதியால்தான் யாசர் அராபத் விஷம் செலுத்தப்பட்டு இறந்தார் என்ற குரல்கள் மீண்டும் எழும்பத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் இஸ்ரேல் இதை மறுத்திருக்கிறது.

யாசர் அராபத் இறந்தவுடன் முகம்மது அப்பாஸ் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவரானார். 2005 ஜனவரியில் பாலஸ்தீனத்தின் ஜனாதிபதியாகவும் ஆனார். ஃபடா கட்சியின் உறுப்பினர் இவர். (ஃபடா கட்சியின் முக்கிய எதிர்கட்சி ஹமாஸ். ஹமாஸைப் பொருத்தவரை அப்பாஸ் ஒரு தலைவரே இல்லை).

1950களிலேயே முகம்மது அப்பாஸ் பாலஸ்தீன அரசியலில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டவர். இஸ்ரேல் ஆக்ரமித்த பகுதிகளிலிருந்து பாலஸ்தீனர்களில் ஒரு பகுதியினர் கட்டாருக்குச் சென்றபோது இவரும் சென்றார். 1961ல் யாசர் அராபத் ஃபடா கட்சியைத் தொடங்கியபோது அதில் உறுப்பினரானார். கத்தார், குவைத் மற்றும் வளைகுடா நாடுகளில் வசித்த பணக்கார பாலஸ்தீனர்களின் நிதி உதவியை யாசர் அராபத் நாடினார். இந்தவிதத்தில் பாலமாகச் செயல்பட்ட முகம்மது அப்பாஸ் வேகமாக வளர்ந்தார்.

என்றாலும் அப்பாஸ் பெரும் வளர்ச்சி கண்டது 2003ல். அந்த ஆண்டில் யாசர் அராபத்தோடு இனி பேச்சு வார்த்தை கிடையாது என்று இஸ்ரேல், அமெரிக்கா இரண்டுமே அறிவித்து விட்டன. ஃபடா கட்சியின் மற்றொரு தலைவரான மர்வான் பர்கவ்டி என்பவர் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு இஸ்ரேல் சிறையில் இருந்தார். முகம்மது அப்பாஸ் பெரும் புகழ் வெளிச்சத்துக்கு வந்தது அப்போதுதான்.



(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x