

இலங்கையில் தமிழர் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகைசெய்யும் கூட்டாட்சி திட்டத்தை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்ரிபால ஸ்ரீசேனா நிராகரித்துள்ளார்.
இலங்கையில் ஜனவரி 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தற்போதைய அதிபர் ராஜபட்ச மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக முக்கிய எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் அமைச்சர் மைத்ரிபால ஸ்ரீசேனா போட்டியிடுகிறார்.
அவருக்கு முன்னாள் அதிபர்கள் சந்திரிகா குமாரதுங்கே, ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புத்த பிட்சு சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய கட்சியும் மைத்ரிபால ஸ்ரீசேனாவுக்கு ஆதரவு அளித்துள்ளது.
அரசாட்சியில் புத்த மதத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அந்தக் கட்சி விடுத்த கோரிக்கையை ஸ்ரீசேனா ஏற்றுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழர் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் கூட்டாட்சி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தமிழ் அமைப்புகள் மைத்ரிபால ஸ்ரீசேனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த கோரிக்கையை அவர் நிராகரித்துவிட்டார். எனினும் அதிபர் ராஜபட்ச மீதான போர்க்குற்றங்களை விசாரிக்க உதவுவதாக உறுதி அளித்துள்ளார்.
அனைத்துக் கட்சி அரசு இலங்கை எதிர்க்கட்சிகள் முடிவு
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், அனைத்துக் கட்சிகள் அடங்கிய அரசை அமைப் பது என எதிர்க்கட்சிகள் தீர்மானித் துள்ளன. இது தொடர்பாக எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்ரிபால ஸ்ரீசேனாவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது.
ஜனநாயகத்தை மறு நிர்மாணம் செய்தல், நல்ல நிர்வாகம், சமூக நீதி, சட்டத்தின் ஆட்சி, நாடாளுமன்ற நடைமுறை அரசை மீள் கட்டமைப்பு செய்தல் உள்ளிட்டவை இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
மேலும், தற்போது நடைமுறையிலுள்ள சலுகை அல்லது முன்னுரிமை வாக்கு நடைமுறை நீக்கப்பட்டு, புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படும். ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள தீர்மானங்கள் ஆட்சிப் பொறுப் பேற்ற 100 நாட்களுக்குள் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.