

13 வயது சிறுமியை மனித வெடிகுண்டாக மாற்ற அவரது தந்தையே தீவிரவாதிகளிடம் பெருந்தொகைக்கு விற்பனை செய்துள்ளார்.
நைஜீரியாவில் இஸ்லாமிய ஆட்சியை அமல்படுத்தக் கோரி போகோஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த தீவிரவாத அமைப்பு நடத்தும் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் தற்கொலைப் படை தாக்குதல்களில் 2000 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 10-ம் தேதி நைஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரான கெனோவில் 2 தற்கொலைப் படை தீவிரவாதிகள் வெடித்துச் சிதறினர். இதில் பலர் உயிரிழந்தனர். அந்தப் பகுதியில் உடலில் வெடிகுண்டை கட்டியிருந்த 13 வயது சிறுமி ஜாரா பாபான்கிடாவை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாராவின் தந்தை சில மாதங் களுக்கு முன்பு போகோஹாரம் தீவிரவாதிகளிடம் அவரை பெருந்தொகைக்கு விற்றுள்ளார். ஏதுமறியாத அந்தச் சிறுமியிடம், நீ சொர்க்கத்துக்கு போக விரும்புகிறாயா என்று தீவிரவாதிகள் கேட்டுள்ளனர். அந்தச் சிறுமியும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் சிறுமியை மனித வெடிகுண்டாக மாற்ற தீவிர வாதிகள் முயற்சி செய்துள்ளனர். உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு கெனோ நகரில் தாக்குதல் நடத்த அவருக்கு கட்டளையிடப்பட்டது. அவர் ஏற்க மறுத்தபோது தீவிரவாதிகள் மூளைச் சலவை செய்தும் மிரட்டியும் பணிய வைத்துள்ளனர்.
கடந்த 10-ம் தேதி கெனோ நகரில் ஜாரா உட்பட 3 சிறுமிகள் தற்கொலை படை தாக்குதலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதில் 2 சிறுமிகள் வெடித்துச் சிதறினர். ஆனால் ஜாரா மட்டும் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யாமல் அழுது கொண்டு நின்றதால் போலீஸில் சிக்கியுள்ளார். சிறுமியை தீவிரவாதிகளிடம் விற்ற தந்தையை நைஜீரிய போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.