

மாயமான எம்எச் 370 மலேசிய விமானம் என்ன ஆனது? இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பது உண்மையாகவே தெரியவில்லை என்று மலேசிய போலீஸ் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த சம்பவம் தொடர் பாக விசாரணை தொடர்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 8-ம் தேதி கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் புறப்பட்ட மலேசிய விமானம் மாயமானது. பல நாடுகள் இணைந்து கடல் வழியாகவும், வான் வழியாகவும், செயற்கைக்கோள்கள் மூலமாக வும் தேடியும் விமானத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே விமானம் கடலில் விழுந்து மூழ்கி விட்டது. அதில் இருந்த அனை வரும் இறந்துவிட்டனர் என்று மலேசிய அரசு அறிவித்துவிட்டது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கோலாலம்பூரில் செய்தி யாளர்களிடம் பேசிய மலேசிய காவல்துறை தலைவர் காலித் அபு பக்கர் கூறியது:
விமானம் குறித்து தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடை பெற்ற விசாரணைகளின் அடிப்படை யில் விமானம் என்ன ஆனது என்பதை உண்மையாகவே தெரிந்துகொள்ள முடியவில்லை. அந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதும் தெரியவில்லை. விமானம் மாயமானதை குற்ற வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அதில் பயணித்தவர்கள் குறித்தும் முழுமையாக விசாரிக்கப்பட்டது. அதில் சந்தேகப்படும்படியாக யாரும் இல்லை என்றார்.
ஆஸ்திரேலியாவை ஒட்டிய தெற்கு இந்திய பெருங் கடலில் விமானம் விழுந்து மூழ்கி விட்டதாகவே தெரிகிறது. அங்கு தொடர்ந்து தேடுதல் பணி நடைபெறுகிறது. பிரிட்டனைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று புதிதாக விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.