

படுகொலை வழக்கிலிருந்து எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, அங்கு ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறை யில் 2 பேர் உயிரிழந்தனர்; 9 பேர் காயமடைந்தனர்.
2011-ம் ஆண்டு ஹோஸ்னி முபாரக் அதிபராக இருந்தபோது, அவர் ஆட்சியை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது, சுமார் 846 பேரைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. மக்கள் புரட்சி வென்றதையடுத்து அவர் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
தற்போது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் மீதான கொலைக்குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். இதில், கொலைக்குற்றச்சாட்டிலிருந்து அவரை இரு தினங்களுக்கு முன்பு நீதிமன்றம் விடுவித்தது.
இதை எதிர்த்து, 3,000க்கும் அதிகமானவர்கள் நேற்று முன்தினம் இரவு தஹ்ரிர் சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை சதுக்கத்துக்குள் நுழைய விடாமல் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியும், நீரைப் பீய்ச்சியடித்தும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது நடந்த மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.