ஆஸி. உணவகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியின் பின்னணி

ஆஸி. உணவகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியின் பின்னணி
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஓர் உணவகத்தில் பிணைக் கைதிகளை பிடித்து வைத்திருந்த தீவிரவாதி ஈரானை சேர்ந்த ஹரோன் மோனிஸ் என தெரியவந்துள்ளது.

ஈரானில் இருந்து ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் புகுந்த அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. மனைவியை கொலை செய்த வழக்கில், ஹரோன் மோனிஸ் அண்மையில்தான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

மேலும் அவர் மீது 40-க்கும் அதிகமான பாலியல் வழக்குகள் உள்ளன. போலீஸ் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள அவரது படத்தையும், ஹோட்டலுக்குள் இருந்தபோது வீடியோவில் பதிவான அவரது உருவத்தையும் வைத்து அவர் மோனிஸ் என்பது உறுதி செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உணவகத்தில் புகுந்து, பொதுமக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த தீவிரவாதியை போலீஸார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு சுட்டுக் கொன்றனர். இந்த நடவடிக்கையின்போது பிணைக் கைதி ஒருவரும் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர். 16 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சுமார் 30 பிணைக் கைதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஆஸ்திரேலிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவம் குறித்து அந்நாட்டு பிரதமர் டோனி அபாட் அளித்த பேட்டியில், "ஹரோன் மோனிஸ் குற்றப் பின்னணி உடையவர். ஆப்கனில் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி உயிர்நீத்த ஆஸி. வீரர்களின் குடும்பத்தாருக்கு வீரர்கள் உயிரிழப்பை நியாயப்படுத்தி சர்ச்சைக் கடிதங்களை எழுதிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுதவிர தீவிரவாதத்திற்கு ஆதரவாக ஆன்லைனில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவேற்றினார்" என தெரிவித்தார்.

தீவிரவாதியை வீழ்த்துவதில் திறம்பட செயல்பட்ட நியூ சவுத் வேல்ஸ் போலீஸாரையும், மற்ற புலனாய்வு அமைப்புகளுக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக கூறினார்.

ஆஸ்திரேலியா போன்ற அமைதியை விரும்பும் நாட்டுக்குக்கூட தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கிறது என்பது வேதனையளிக்கிறது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in