

உலக வெப்பநிலை உயரும் ஒவ்வொரு 1 டிகிரி செல்சியஸிற்கும் சுமார் 6% கோதுமை உற்பத்தி உலக அளவில் குறையும் என்று புதிய சுற்றுச்சூழல் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
தற்போதைய கணக்குகளின் படி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர்வடைவது தடுக்க முடியாத நிலையை எட்டியுள்ளதை அடுத்து உலகின் முக்கிய உணவு தானியமான கோதுமை உற்பத்தி பெருமளவில் அடிவாங்கும் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் புவி வெப்பமடைதலுக்கும் அதன் விளைவான வானிலை மாற்றங்களுக்கும் காரணமாகும் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தில் தற்போதைய நிலவரம் நீடித்தால் 5 டிகிரி செல்சியஸ் வரை உலக வெப்ப நிலை அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது.
ஆய்வாளர்கள் 30 கணினிகளின் மாதிரியில் கள பரிசோதனை மேற்கொண்டதில் புவி வெப்பமடைதலின் விளைவாக 6% அல்லது அதற்கு அதிகமாக கோதுமை உற்பத்தி குறையும் என்று கணித்துள்ளனர்.
தொடர்ந்து மக்கள் தொகையும் அதிகரித்து வருவதால் கோதுமை உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவது பெரிய அச்சுறுத்தலை விளைவிக்கலாம் என்று இந்த் ஆய்வு எச்சரிக்கிறது.
ஏற்கெனவே வளரும் நாடுகள் பலவற்றில் உணவுப்பொருட்கள் விலை 10% சதவீதத்திற்கும் குறைவாக அதிகரித்துள்ள நிலையிலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோதுமை உற்பத்தி குறையுமானால் ஏழை நாடுகளின் கதி முற்றிலும் பாதிப்புக்குள்ளாகும் என்கிறது இந்த ஆய்வு.
உலக மக்கள் தொகை தற்போது 7 பில்லியன். கணிப்புகளின் படி இது 9 பில்லியன்களாகவும், 2050-ஆம் ஆண்டுவாக்கில் 12 பில்லியன்களாகவும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இது, உலகத்தின் நீராதாரம் மற்றும் விளைநில ஆதாரங்கள் மீது எதிர்மறைத் தாக்கங்களை விளைவிக்கும்.
வானிலை மாற்றங்களை சந்தேகிக்கும் ஐயுறவுவாதிகள் மீதும் இந்த ஆய்வு விமர்சனம் தொடுத்துள்ளது. அதாவது, விண்வெளியில் கரியமிலவாயு அதிகரிப்பினால் தாவரங்களின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று இவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் இது ஒரு போதும் உண்மையல்ல என்று இந்த ஆய்வு சாடியுள்ளது.
தாவரங்களின் வளர்ச்சிக்கு நீராதாரம் அவசியம். புவி வெப்பமடைதலால் அந்த அடிப்படையே ஆட்டம் காணும் போது கரியமிலவாயுவினால் தாவரங்கல் வளர்ச்சி எப்படி அதிகரிக்கும்? என்று ஆதாரபூர்வமாக கேள்வி எழுப்புகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
இந்த ஆய்வின் தலைவர் புளோரிடா பல்கலைக் கழக விஞ்ஞானி ஆவார். இவர் தவிர அமெரிக்காவின் பிற பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஜெர்மனி, பிரான்ஸ், மெக்சிகோ, ஆஸ்திரேலியா மற்றும் சீன நாட்டு விஞ்ஞானிகளும் சேர்ந்த் நடத்தியுள்ளனர்.
“வெப்பநிலை மாற்றம் ஒன்று மட்டுமே தாவரங்களின் வளர்ச்சி, உணவுதானிய உற்பத்தியில் பெரும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கு மாற்றாக வெப்பநிலையை ஏற்றுக் கொண்டு உற்பத்தி பாதிக்காத வகையில் தானியங்களை மாற்றி அமைப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும்.” என்று இந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.