

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் 2009-ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர வெள்ளத்திற்கு 123 பேர் பலியானதையடுத்து லஞ்சம், ஊழல் குற்றம்சாட்டி 45 பேருக்கு சவுதி நீதிமன்றம் சிறைத் தண்டனை அளித்துள்ளது.
சவுதி அரேபியாவின் இரண்டாவது பெரிய நகரமான ஜெட்டாவில் 2009-ஆம் ஆண்டு திடீர் புயல்-மழை காரணமாக பயங்கர வெள்ளம் ஏற்பட்டது. இதில் 123 பேர் பலியாக, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
ஜெட்டா நகர அதிகாரிகளினால் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நீரை வெளியேற்ற முடியவில்லை, மக்களையும் காப்பாற்ற முடியவில்லை. ரியல் எஸ்டேட் முறைகேடுகளும், கட்டிடம் கட்டுவதில் திட்டமிடுதலில் ஊழலும், லஞ்சமும் தலைவிரித்து ஆடியதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து அப்துல்லா அரசர் சட்ட நடவடிக்கை கோரியிருந்தார்.
இது குறித்து அராப் செய்திகள் தெரிவிக்கும் போது, இந்த வெள்ளம் தொடர்பான அழிவுகளுக்கு பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகள், பொறியியலாளர்கள், கல்வியியலாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அயல்நாட்டு ஊழியர்கள் உட்பட 45 பேருக்கு பல்வேறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது சவுதி நீதிமன்றம்.
மேலும் இவர்களுக்கு 14 மில்லியன் ரியால்கள் (3.73 மில். டாலர்கள்) தொகை அபராதமும் விதிக்கப்பட்டது. இவர்கள் மீது லஞ்சம், மோசடி, பொதுமக்கள் பணத்தை துஷ்பிரயோகம் செய்தல், சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுதல், நிதிமுறைகேடு, ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டது.
அதாவது கட்டுப்பாடில்லாமல் கட்டிடங்கள் எழுப்பப்பட்டதால் வெள்ள நீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனையடுத்து ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் சுமார் 11,000 பேர் நகர அரசு மற்றும் ஒப்பந்ததாரர்களே துயரத்திற்குக் காரணம் என்று கடும் கண்டனங்களை எழுப்பியிருந்தனர்.
மேலும், 2009-ற்குப் பிறகு 2 ஆண்டுகளில் ஏற்பட்ட மற்றுமொரு வெள்ளத்தில் இதே நகரத்தில் 10 பேர் பலியானதும் பெரும் சர்ச்சைகளை அங்கு எழுப்பியது