

உலகின் மிக குண்டான மனிதராகக் கருதப்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த கெய்த் மார்ட்டின் தனது 44-வது வயதில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
பிரிட்டனைச் சேர்ந்தவர் கெய்த் மார்ட்டின். இவரின் அதிகபட்ச எடை 444.5 கிலோ. உலகின் மிக குண்டான மனிதராக அறியப் பட்டவர். அதிக உடல் எடை காரணமாக இவரால் நடக்க முடியாது. அதிக உடல் எடையால் மிகுந்த அவதிக்கு உள்ளான இவருக்கு, 8 மாதங்களுக்கு முன்பு வயிற்றின் முக்கால்பகுதி அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
எடை குறைப்பு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிருடன் இருந்திருந்தால் மேலும் எடை குறைந்து வழக்கமான மனிதர்களைப் போல அவர் நடமாடியிருக்க முடியும். துரதிருஷ்டவசமாக அவர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.