

பாகிஸ்தானில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் மீது தீவிரவாத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி இம்ரான் கான் தலைமையிலான தெரீக்-ஐ-இன்சாப் கட்சி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலம் ஃபைசலாபாத் நகரில் கடந்த திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. இதில் இம்ரான் கட்சியினருக்கும் ஆளும் பாகிஸ் தான் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இதில் ஹக் நவாஸ் என்பவர் உயிரிழந்தார். மேலும் போலீஸார் உட்பட 17 பேர் காயமடைந்தனர்.
பஞ்சாப் மாநில முன்னாள் சட்ட அமைச்சர் ராணா சனாவுல்லா வீட்டின் மீது இம்ரான் கான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சனாவுல்லா கொடுத்த புகாரின் அடிப்படையில் இம்ரான் கான் மீது தீவிரவாத சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் அவாமி கட்சித் தலைவர் ஷேக் ரஷீத், இம்ரான் கட்சியின் மூத்த தலைவர்கள் ஷா முகமது குரைஷி, ஆரிப் ஆல்வி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.