Last Updated : 26 Apr, 2014 03:22 PM

 

Published : 26 Apr 2014 03:22 PM
Last Updated : 26 Apr 2014 03:22 PM

என் சகோதரர் பாஜக-வில் சேர்ந்தது வருத்தம் அளிக்கிறது: மன்மோகன்

பாரதிய ஜனதாவில் இணைந்த தனது சகோதரர் தல்ஜித்சிங் கொஹிலியின் செயல்பாடு மிகுந்த வருத்தம் அளிக்கிறது என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவின் இடையே இது தொடர்பான கேள்விக்கு பிரதமர் பதில் அளிக்கையில், “இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். இதை என்னால் கட்டுப்படுத்த முடிய வில்லை” என்றார்.

மன்மோகனின் மாற்றாந்தாய் மகனான கொஹிலியுடன், பல ஆண்டுகளாக பிரதமருக்கு தொடர்பு இல்லை என்று கூறப்படுகிறது. மிகவும் இளம் வயதிலேயே இறந்து விட்ட பிரதமரின் தாயாருக்கு 4 மகன்கள் மற்றும் 6 மகள்கள் உள்ளனர். இதில், கொஹிலி, பாஜகவில் இணைந்தது குறித்து பிரதமரின் குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது ‘தி இந்து’விடம் கூறுகையில்,

“ஒவ்வொரு தனி மனிதருக்கும் தமது கொள்கை களை தேர்ந்தெடுக்க முழு உரிமை உள்ளது. கொஹிலி ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் காங்கிரஸுக்கு ஆதரவாக இருப்பதாக மற்றொரு சகோதரர் கூறியிருக்கிறார். கொஹிலிக்கு மட்டும் தனது முடிவு தனக்கு மிகவும் உதவியாக இருக்கும் எனத் தோன்றியிருக்கலாம்” என்றார்.

இந்த இணைப்பு பற்றி கொஹிலியின் மூத்த சகோதரர் சுர்ஜித் சிங் தனது உறவினர் மற்றும் நட்பு வட்டாரத்தில் மிகவும் வருந்தியபடி பேசி வருகிறார்.

கொஹிலியின் சகோதரி மகனான மந்தீப் சிங் கொஹிலி கூறுகையில், “எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் முடிவு இது. ஆயத்த ஆடைகள் தயாரித்து வியாபாரம் செய்து வந்த தல்ஜீத்திற்கு சில ஆண்டுகளாக அதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய பாஜகவில் இணைந்துள்ளார். இவருக்கு கட்சி யிலும் நல்ல பதவி அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

பிரதமரின் பேரன்களில் ஒருவரான ரந்தீப்சிங் கூறுகையில், “எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கும் இந்த இணைப்பு, அவரது சொந்த விருப்பம். நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் மன்மோகன்சிங் ஒரு நேர்மையான மனிதர். அவரால் எங்கள் குடும்பத்திற்கு பெருமை” என்றார்.

பஞ்சாபின் சிறுதொழில் அதிபரான கொஹிலி, கடந்த வெள்ளிக்கிழமை அமிர்தசரஸில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு தனி மனிதருக்கும் தமது கொள்கைகளை தேர்ந்தெடுக்க முழு உரிமை உள்ளது. கொஹிலி ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் காங்கிரஸுக்கு ஆதரவாக இருப்பதாக மற்றொரு சகோதரர் கூறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x