

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக மகிந்த ராஜபக்ச நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச உள்பட 19 பேர் போட்டியிடுகின்றனர். அங்கு ஜனவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இப்போது இலங்கை அதிபராக உள்ள ராஜபக்ச தொடர்ந்து 3-வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
ராஜபக்சவை எதிர்த்து போட்டியிடும் முக்கிய வேட்பாளரான மைத்ரிபால ஸ்ரீசேனாவும் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவர் ராஜபக்ச அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். எனினும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட முடிவு செய்தார். இதையடுத்து அவரை பதவியில் இருந்து ராஜபக்ச நீக்கினார். முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் மைத்ரிபால ஸ்ரீசேனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
புத்த பிட்சுகள் சார்பாக ஒருவரும், இலங்கையில் சிறு பான்மையினர்களான தமிழர்கள், முஸ்லிம்கள் சார்பில் தலா ஒருவரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மொத்தம் 1 கோடியே 40 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.
2005,2010-ம் ஆண்டுகளில் ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட் டியிட்டு வென்றார். இப்போது இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே அதிபர் தேர்தலை நடத்துகிறார். செப்டம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் ஜனநாயக கூட்டணி பின்னடைவை சந்தித்தது. இதையடுத்து இலங்கை ஆட்சி அதிகாரத்தின் மீதான தனது பிடியை பலப்படுத்திக் கொள்ளும் வகையில் அதிபர் தேர்தலை ராஜபக்ச முன் கூட்டியே நடத்துகிறார்.
19 வேட்புமனுக்களை பெற்றுக் கொண்டது குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை தேர்தல் ஆணையர் மகிந்த தேசபிரியா, “ராஜபக்ச, மைத்ரிபால ஸ்ரீசேனா ஆகியோரின் வேட்புமனுக்களுக்கு எதிராக வந்த இரு ஆட்சேப மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன” என்றார்.