

அமெரிக்க பொது சுகாதார தலைவராக (சர்ஜன் ஜெனரல்) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க டாக்டர் விவேக் மூர்த்தியை நியமிக்கும் அதிபர் ஒபாமாவின் முடிவுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற செனட் அவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் 37 வயதாகும் விவேக் மூர்த்தி அந்தப் பதவிக்கு மிக இளம் வயதில் தேர்வானவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இப்பதவியை ஏற்கும் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கரும் அவர்தான்.
விவேக் மூர்த்தியின் பூர்விகம் கர்நாடக மாநிலமாகும். இங்கிலாந்தில் பிறந்த இவர், தன்னுடைய மூன்று வயதில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு குடும்பத்தினருடன் இடம்பெயர்ந்தார். முன்னதாக விவேக் மூர்த்தியை இப்பதவிக்கு நியமிக்கும் ஒபாமாவின் முடிவுக்கு செனட் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
விவேக் மூர்த்தி ஆயுத பயன்பாடுகளுக்கு எதிரானவர். அதனால் செனட்டில் உள்ள 'ஆயுத பயன்பாட்டு உரிமை' ஆர்வலர்கள் பலர் இவரை எதிர்த்து வந்தனர். அவருக்கு இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கக் கோரி இந்திய அமெரிக்கர்கள் பலர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் விவேக் மூர்த்தியை அப்பதவியில் நியமிக்க 43 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் அவருக்கு ஆதரவாக 51 செனட் உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். கடந்த ஆண்டு நவம்பரில் அவரை இப்பதவிக்கு ஒபாமா பரிந்துரைத்தார். சுமார் ஓராண்டுக்குப் பிறகு செனட் அவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது. செனட்டின் இந்த முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக ஒபாமா கூறியுள்ளார்.