

காதலியை 117 முறை அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய அமெரிக்க வாழ் இந்தியர் தகுந்த சாட்சியங்கள் இருந்தும் சிறைத் தண்டனையில் இருந்து தப்பினார்.
அமெரிக்க வாழ் இந்தியரான குர்பக்ஸ் சஹால் (31), ‘ரேடியம் ஒன்' எனும் ஆன்லைன் விளம்பர நிறுவனத்தை நடத்தி வருகிறார். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய அவர் 16 வயதிலேயே விளம்பர நிறுவனத்தை தொடங்கி இன்று அமெரிக்காவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்து உள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ‘எக்ஸ்ட்ரா டி.வி.' தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் அமெரிக்காவில் மிகவும் விரும்பத்தக்க திருமணமாகாத இளைஞராக இவர் தேர்வு செய்யப் பட்டார்.
இவரும் ஜூலியட் காகிஷ் என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் வேறொரு நபருடன் ஜூலியட்டுக்கு தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த குர்பக்ஸ் சஹால் தனது வீட்டுக்கு வந்த காதலியை சுமார் 30 நிமிடங்களில் 117 முறை அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது காதலி அளித்த புகாரின் பேரில் குர்பக்ஸ் சஹால் கடந்த ஆகஸ்ட்டில் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டிலிருந்து வீடியோ பதிவுகளும் கைப்பற்றப்பட்டன. எனினும் ரூ.6 கோடி பிணைத் தொகையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
குர்பக்ஸ் சஹாலின் வீட்டில் நீதிமன்ற வாரன்ட் இல்லாமல் போலீஸார் சோதனை நடத்தி வீடியோ ஆதாரங்களை பறிமுதல் செய்தனர். எனவே சட்டத்திற்குப் புறம்பாக வீடியோ பதிவு கைப்பற்றப் பட்டதால் அதை ஒரு சாட்சியமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிமன்றம் மறுத்துவிட்டது.
எனினும் சஹால் காதலியை அடித்ததை ஒப்புக்கொண்டதால் அவரை மூன்று ஆண்டுகள் போலீஸ் கண்காணிப்பில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த காலத்தில் அவர் தனது காதலிக்கு ஏதேனும் தீங்கிழைத்தால் மட்டுமே சிறையில் அடைக்கப்படுவார். மேலும் சில சமூகப் பணிகள், நன்னடத்தை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பு அமெரிக்காவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும் கோடீஸ்வரரான குர்பக்ஸ் சஹால் அதிபர் பராக் ஒபாமாவுக்கு நெருக்கமானவர் என்றும் ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு தாராளமாக நிதி வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாகவே சிறை தண்டனையில் இருந்து அவர் தப்பிவிட்டார் என்று பரவலாகப் பேசப்படுகிறது.