Last Updated : 11 Dec, 2014 11:30 AM

 

Published : 11 Dec 2014 11:30 AM
Last Updated : 11 Dec 2014 11:30 AM

இலங்கையில் ராஜபக்ச அரசில் 2 தமிழ் அமைச்சர்கள் பதவி விலகல்: நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் பின்னடைவு

இலங்கையில் அதிபர் ராஜபக்ச அரசில் இடம்பெற்றிருந்த 2 தமிழ் அமைச்சர்கள் நேற்று எதிர் அணிக்கு தாவினர். இதனால் அதிபர் ராஜபக்சவின் கட்சி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு மடங்கு என்ற பெரும்பான்மையை இழந்தது.

இலங்கையில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிபர் ராஜபக்சவுக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.

பழனி திகாம்பரம், வி.ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் ராஜபக்ச அரசில் துணை அமைச்சர்களாக இருந்தனர். இவர்கள் இந்திய வம்சாவளி தமிழர்களின் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் எதிரணியில் சேரும் வகையில் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக இவர்கள் நேற்று அறிவித்தனர்.

225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சவின் ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணிக்கு 161 உறுப்பினர்கள் இருந் தனர்.

தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு இதுவரை 5 கேபினட் அமைச்சர்கள், 3 துணை அமைச்சர்கள் உள்பட 13 எம்.பி.க்கள் ஆளும் கூட்டணியில் இருந்து விலகியுள்ளனர். இதனால் ஆளும் கூட்டணியின் பலம் 149 ஆக உள்ளது. இது 3-ல் 2 மடங்கு பெரும்பான்மைக்கு குறைவாகும்.

3-ல் 2 மடங்கு பெரும்பான்மை மூலமே அதிபர் தேர்தலில் 3-வது முறையாக போட்டியிடும் வகையில் ராஜபக்ச சட்டத்திருத்தம் செய்தார்.

இதனிடையே எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர் திஸ்ஸா அட்டநாயகே நேற்று ராஜபக்ச கட்சியில் இணைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x