

தென்கொரியாவைச் சேர்ந்த மீன்பிடிக் கப்பல் நேற்று ரஷ்யா அருகே பேரிங் கடல் பகுதியில் மூழ்கி விபத்துக்கு உள்ளானது. அதில் பயணம் செய்தவர்களில் 54 பேரைக் காணவில்லை. அவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
மீன்பிடி படகில், 35 இந்தோனேசியர்கள், 13 பிலிப்பின்ஸ் நாட்டவர்கள், 11 தென் கொரியர்கள், ஒரு ரஷ்ய மீன்பிடி ஆய்வாளர் உட்பட மொத்தம் 62 பேர் பயணம் செய்தனர்.
படகு விபத்துக்குள்ளான தகவல் அறிந்ததும் தென்கொரிய மீட்புப் பிரிவினர் 7 பேரையும் ஒரு சடலத்தையும் மீட்டனர். பருவ நிலை மோசமாக இருந்ததால் மற்றவர்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. உயிர் காக்கும் படகு ஒன்று யாரும் இல்லாமல் தனியே மிதப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
படகில் 8 உயிர்காக்கும் படகு கள் மட்டுமே இருந்துள்ளன. அதனை பயன்படுத்தி 7 பேர் உயிர்பிழைத்துள்ளனர். தனியே மிதந்த உயிர்காக்கும் படகு, இறந்த ஒருவர் பயன்படுத்தியது என ஊகிக்கப்படுகிறது. கப்பல் விபத்துக்குள்ளானபோது, அலைகள் 13 அடி உயரம் எழும்பியுள்ளன. தட்பவெப்ப நிலை 14 டிகிரி செல்சியஸாக இருந்துள்ளது.
காணாமல் போன அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. தென் கொரிய பிரதமர் சுங் ஹாங் வொன் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் கூறும்போது, “ரஷ்யாவுடன் இணைந்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்படும்” என்றார்.