Last Updated : 30 Dec, 2014 11:59 AM

 

Published : 30 Dec 2014 11:59 AM
Last Updated : 30 Dec 2014 11:59 AM

சிலிர்த்து நிற்கும் சிங்கப்பூர் - 1

பல இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் நாடு. ஆனால் அந்த நாட்டுக்குப் பெயர் கொடுத்தது ஒர் இந்திய மொழிதான். `சிங்க நகரம்’ என்ற பொருளைத் தரும் சமஸ்கிருத வார்த்தைதான் சிங்கப்பூர்.

எல்லாமே இருக்கும் நாடு. எதுவுமே இல்லாத நாடு. இந்த இரண்டுக்கும் உதாரணங்கள் கொடுக்கச் சொன்னால் நீங்கள் ஒரே ஒரு உதாரணம் கொடுத்தால் கூடப் போதும். சிங்கப்பூர் மேற்படி இரண்டு விளக்கங்களுக்குமே பொருந்தக் கூடிய நாடு. எப்படி என்பதைப் பிறகு பார்ப்போமே.

ஒரு முக்கியத் தீவு, 63 மிகச் சிறிய தீவுகள் - இவைதான் சிங்கப்பூர். சிறிய தீவுகளில் பெரும்பாலானவை மக்கள் வசிக்காதவை. தொன்மைக் காலத்தைச் சேர்ந்த பிரபல வானியல் நிபுணர் தாலமின் `சபனா’ என்று குறிப்பிட்டிருப்பது சிங்கப்பூர் பகுதியையா? இதில் சரித்திர ஆய்வாளர்களுக்குக் கொஞ்சம் குழப்பம் இருக்கிறது.

ஆனால் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன ஆவணங்கள் சிங்கப்பூர் குறித்து ஓரளவு தெளி வாகவே குறிப்பிட்டுள்ளன. `பூ லுவோ சுங்’ இதன் அர்த்தம் `தீவின் முடிவு’. மலாய் தீபகற்பத்தின் முடிவில் இருந்தது சிங்கப்பூர்.

மலேயா பகுதிகளில் ஒரு பிரபல நாடோடிக் கதை உண்டு. சுமத்ராவைச் சேர்ந்த (சுமத்ரா இப்போதைய இந்தோனேஷி யாவின் ஒரு பகுதி) இளவரசன் ஸ்ரீவிஜயன் பதிமூன்றாம் நூற்றாண்டில் ஒரு தீவில் காலடி வைத்தார். அங்கே அவர் முதலில் கண்டது ஒரு சிங்கத்தை, “ஆஹா, என்னவொரு மங்களமான குறி யீடு’ என்று ஆனந்தப்பட்டார். அந்தத் தீவில் மக்களைக் குடி யேற்றினார். சிங்கபுரா என்று அதற்குப் பெயரிட்டார். (ஆனால் ‘சிங்கப்பூரில் எப்போதுமே சிங் கங்கள் இருந்ததில்லையே. அவர் பார்த்தது புலியாக இருக்கலாம்’ என்று முணுமுணுக்கும் சரித்திர ஆராய்ச்சியாளர்களும் இருக் கிறார்கள்)

பதினோராம் நூற்றாண்டில் சோழச் சக்ரவர்த்தி முதலாம் ராஜேந்திர சோழன் விஜய சாம்ராஜ்யத்தை வெற்றிகண்ட போது சிங்கப்பூரும் சோழர்கள் வசம் வந்தது.

பதினான்காம் நூற்றாண்டில் சயாம் மற்றும் மஜாபாகித் பேரரசுகளுக்கிடையே சிங்கப் பூரை அடைவதற்குக் கடும் போட்டி ஏற்பட்டது. (இன்றைய தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா என்று இவற்றைத் தோராயமாகக் குறிப்பிடலாம்). மஜாபாகித் பேரரசு சிங்கப்பூரை வெற்றி கண்டது. பல வருடங்கள் அதை ஆண்டது.

காலப்போக்கில் சிங்கப்பூர் மலாகா சுல்தானிடம் சென்றது. இப்படிப் பலரிடம் கைமாறிய சிங்கப்பூர் 1511ல் போர்த்துகீசியர் வசப்பட்டது. இவர்கள் சிங்கப் பூரிலுள்ள அத்தனை குடியேற்றங் களையும் அழித்தனர். அடுத்த இரு நூற்றாண்டுகளுக்கு சிங்கப் பூர் என்ற தீவே ஊர்பேர் தெரியாமல் போனது.

பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய ஆதிக்க சக்திகள் உலகெங்கும் கிளை பரப்பின. பிரிட்டிஷ்காரர்களின் பார்வை மலாய் பகுதியில் பட்டது. சர் ஸ்டாம்ஃபோர்டு ராஃபில்ஸ் என்பவர் மலேயா பகுதிக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இவர் கிழக்கிந்தியக் கம்பெனியில் 1795ல் வெறும் குமாஸ்தாவாகச் சேர்ந்தவர். தன் திறமையால் பல பதவி உயர்வுகளைப் பெற்று 1805ல் பினாங்குக்கு அனுப்பப்பட்டார். ஆறு வருடங்களுக்குப் பிறகு ஜாவா பகுதியின் லெப்டினென்ட் கவர்னர் ஆனார்.

பினாங்கு, ஜாவா பகுதியி லுள்ள டச்சுக்காரர்களின் அதி காரத்தைக் குறைக்க வேண்டும், சீனா மற்றும் பிரிட்டிஷ் இந்தியா வுக்கான வணிகப் பாதையை தடையற்றதாக மாற்ற வேண்டும். (அப்போதுதானே சீனாவுக்கு நிறைய ஓபியத்தை ஏற்றுமதி செய்யலாம்! ஹாங்காங் சரித்திரம் நினைவுக்கு வருகிறதா?). - இவைதான் பிரிட்டிஷ் அரசால் அவருக்கு இடப்பட்ட முக்கிய கட்டளைகள்.

டச்சுக்காரர்களின் மீது பிரிட்டன் கோபம் கொண்டதற்கு சாம்ராஜ்யப் போட்டியைத் தவிர அந்தப் பகுதி தொடர்பான ஒரு காரணமும் இருந்தது. தங்கள் வசமிருந்த துறைமுகங்களில் பிரிட்டிஷ் கப்பல்கள் வந்து இறங்கினால் அவற்றை டச்சுக்காரர்கள் அனு மதிக்க மறுத்தார்கள். அப்படியே அனுமதித்தாலும் அதற்கு எக்கச்சக்கமான நுழைவுக் கட்டணம் தீட்டினார்கள்.

என்ன தீர்வு? ஸ்டாம்ஃபோர்டு தீவிரமாக யோசித்தார். மலாகா ஜலசந்தியில் புதிதாகவே ஒரு துறைமுகத்தை உருவாக்கத் தீர்மானித்தார். இதற்காக மலேயா தீபகற்பத்தின் பல பகுதிகளை ஆராய்ந்தார். சிங்கப்பூர்தான் சிறப்பான இடம் என்று முடிவெடுத் தார். இத்தனைக்கும் அது சேற்று நிலங்களும், காட்டுப் பகுதியாக வும் மிகக் குறைந்த மக்கள் தொகை யும் கொண்டதாக இருந்தது. என்றாலும் அங்கு ஒரு துறைமுகம் உருவாக்கப்பட்டால் அதனால் உண்டாகக்கூடிய நன்மைகளை தெளிவாகவே கணிக்கும் தொலை நோக்குப் பார்வை அவரிடம் இருந்தது.

அப்போது அந்தத் தீவை ஜோஹோர் சுல்தான் என்பவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். இவர் டச்சுக்காரர்களுக்குக் கப்பம் கட்டிக் கொண்டிருந்தவர். சுல்தான் 1812ல் இறந்தார். அவரது இரண்டு மகன்களும் வாரிசுரிமைப் போரில் ஈடுபட்டனர். ரஃபில்ஸ் மூத்தவர் உசேனை ஆதரித்து அவரை சுல்தான் ஆக்கினார். பதிலுக்கு சிங்கப்பூரை பெற்றுக் கொண்டார். இலவசமாக அல்ல. ஆண்டு வாடகைக்குதான்.

அடுத்த சில வருடங்களிலேயே பிரிட்டன் தனது ஓநாய் இயல்பை வெளிக்காட்டியது. “மொத்தமாக ஒரு தொகை தந்துவிடுகிறோம். சிங்கப்பூர் எங்களுக்குத்தான்’’ என்றது. உசேன் தயங்கினார். பிரிட்டன் விடவில்லை. பலவித குறுக்கு வழிகளின் மூலம் சுல்தானை சம்மதிக்க வைத்தது. 1819 பிப்ரவரி 6 அன்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

நவீன சிங்கப்பூர் பிறந்தது.

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x