

பாகிஸ்தானில் லாகூரில் அமைந்துள்ள சிறை மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தீட்டியிருந்த சதித் திட்டத்தை அந்த நாட்டு உளவுத் துறையினர் முறியடித்துள்ளனர்.
பெஷாவர் பள்ளி தாக்குதலைத் தொடர்ந்து சுமார் 500 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. அடுத்தடுத்து சில தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. எனவே பாகிஸ்தானின் முக்கிய சிறைகளை தகர்த்து அங்கு அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளை மீட்க தீவிரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியுள்ளன.
இதன்படி பஞ்சாப் மாகாணம், லாகூர் நகரில் உள்ள கோட் லாக்பாட் சிறை மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்தனர். இந்த சிறையில் 50-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தூக்கு தண்டனை கைதிகள் ஆவர்.
அவர்களை மீட்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதை உளவுத் துறையினர் அண்மையில் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக 2 பெண்கள் உட்பட 3 தீவிரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ராக்கெட்டுகள், துப்பாக்கிகள், செல்போன்கள், கைதிகளுக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த உடைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பாகிஸ்தான் போலீஸ் டிஜிபி ஹைதர் அஸ்ரப் கூறியபோது,லாகூரின் பாரித் கோட் பகுதியில் 3 தீவிரவாதிகளை கைது செய்துள்ளோம். அவர்கள் மூவரும் கோட் லாக்பாட் சிறை மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.