சத்யார்த்தி, மலாலாவுக்கு பாராட்டு தெரிவிக்க செனட் அவையில் தீர்மானம் தாக்கல்

சத்யார்த்தி, மலாலாவுக்கு பாராட்டு தெரிவிக்க செனட் அவையில் தீர்மானம் தாக்கல்
Updated on
1 min read

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய் ஆகியோரை பாராட்டி அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் அவையில் தீர்மானம் கொண்டுவர அமெரிக்க எம்.பி. முயற்சி எடுத்துள்ளார். செனட் அவையின் உறுப் பினர் டாம் கார்கின் கொண்டு வந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் 82 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, அவர்கள் கல்வி பயில கைலாஷ் சத்யார்த்தி ஏற்பாடு செய்துள்ளார். தனது 11 வயது முதல் பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய் போராடி வருகிறார்.

அவரை தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி கொல்ல முயன்றனர். அதை துணிவுடன் எதிர்கொண்ட மலாலா, தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறார். அமைதியின் தூதுவர்களாக திகழும் இந்த இருவரும் நோபல் பரிசு பெற்றதற்காக நெஞ்சார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம். சர்வதேச நாடுகளில் உள்ள அரசுகள், அமைப்புகள், நிறுவனங்கள், தனி நபர்கள் இணைந்து குழந்தைகள் நலனைப் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகளின் உரிமைக்காக போராடி, உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூர்ந்து, அவர்களின் பணியை நாம் தொடர வேண்டும். இவ்வாறு அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் செனட் அவையின் வெளியுறவுத்துறை குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பரிசீலனைக்கு பின்பு, செனட் அவையில் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in