Published : 28 Dec 2014 11:28 am

Updated : 28 Dec 2014 11:36 am

 

Published : 28 Dec 2014 11:28 AM
Last Updated : 28 Dec 2014 11:36 AM

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 12

12

கர்ஸாயைக் கொல்ல கணிசமான முயற்சிகள் நடைபெற்றன. 2002 செப்டம்பரில் காந்தஹாருக்கு கர்ஸாய் சென்ற போது தன் காரின் ஜன்னல் வழியாக ஒருவன் கர்ஸாய் இருக்கும் திசையை நோக்கி சுட, மயிரிழையில் அவர் உயிர் தப்பினார்.

2001ல் பதவியேற்றபோது ஆப் கானிஸ்தானின் கடந்தகால ரத்தக் கறையை நீக்குவதாக உறுதி மொழி அளித்திருந்தார் கர்ஸாய். தவிர தனிமையிலிருந்த ஆப்கானிஸ் தானை உலக நாடுகளுடன் ஒன்றிணைப்பதாகவும் கூறினார். இனத் தலைவர்கள் இதை நம்பினார்களோ இல்லையோ பொது மக்களில் பலரும் நம்பினார்கள். ஆனால் பல வருடங்களாகியும் தாலிபன்கள் வேரறுக்கப்படவில்லை. எளிமையாக வாழ்ந்தவர் என்ற பெயர் கிடைத்தாலும், கர்ஸாய் அரசில் ஊழல் மலிந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.


அமெரிக்கர்கள்கூட கர்ஸாய்மீது தொடக்கத்தில் காட்டிய அதீத நம்பிக்கையை குறைத்துக் கொண்டனர். அதுவும் சோமாலியா, வடகொரியா போன்ற நாடுகளுக்கு இணையாக ஆப்கானிஸ்தானிலும் ஊழல் விஷயத்தில் போட்டி நிலவுவதாக புள்ளி விவரங்கள் கூறப்பட்டது பொது மக்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. அதே சமயம் மேலைநாட்டினர், பழங்குடி இனத்தவர், முன்னாள் கம்யூனிஸ்ட்கள் மற்றும் முன்னாள் தாலிபன்களோடு அவர் இயல்பாகக் கலந்து பழகியது ஓர் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாக இருந்தது.

என்றாலும் மக்களுக்கு இது போதவில்லை. இனத் தலைவர் களின் பகைமையும் (இவ்வளவு பட்ட பிறகும்) அவ்வப்போது தலைகாட்டவே செய்கிறது. (2011 செப்டம்பர் 20 அன்று முக்கிய அரசியல் தலைவரான ரப்பானி, காபூலில் கொலை செய்யப்பட்டார். மனித வெடிகுண்டாக வந்த ஒருவர் அவரது வீட்டுக்குள் சென்று தன்னை வெடித்துக் கொண்டு அவரையும் கொன்றான். அப்போதைய ஜனாதிபதி கர்ஸாய் ஆப்கானிய நாடாளுமன்றத்தின் பரிந்துரையின்படி அவருக்கு ‘‘அமைதிக்கான தியாகி’’ (Martyr of Peace) என்ற பட்டத்தை அளித்தார்).

மக்களாட்சி மலர்ந்தது என்றா லும் தாலிபன்களின் இடையூறு நின்றுவிடவில்லை. சமீபத்தில்கூட ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான ஹெல்மண்ட் என்ற பகுதியில் தாலிபன்கள் தாக்குதல் நடத்தினார்கள். தற்கொலைப் படையாக இவர்கள் செயல்பட்ட தில் பத்து பேர் இறந்தனர்.

வெடி குண்டைக் கட்டிக் கொண்டு வந்த ஒருவன் மனித வெடிகுண்டாகச் செயல்பட்டதில் சிதறுண்டு இறக்க, கூட வந்த தாலிபன் குழுவைச் சேர்ந்த மூவரை ஆப்கானிஸ்தான் ராணு வத்தினர் கொன்றனர். கடந்த சில வருடங்களாகவே இதுபோன்ற தாக்குதல்களை ஆப் கானிஸ்தான் கிட்டத்தட்ட தினமுமே சந்தித்து வருகிறது. நேட்டோ அமைப்பின் பின் வாங்கல் முடிவை தாலிபன் அணியினர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அதென்ன பின்வாங்கல் முடிவு என்கிறீர்களா? ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நுழைந்தது. தாலிபனை அகற்றியது. இப்படி நுழைந்தது முக்கியமாக அமெரிக்க ராணுவம் தான் என்றாலும் வட அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பின் (நேட்டோ) சக உறுப்பினர் நாடு களின் ராணுவங்களும்கூட இதில் கூட்டு சேர்ந்து கொண்டன.

பதிமூன்று வருடங்கள் ஆப் கானிஸ்தானில் தாலிபன்களை எதிர்த்துச் செயல்பட்டபின் அங்கி ருந்து ஜனவரி 1 ,2015 அன்று தங்கள் ராணுவத்தின் பெரும் பங்கை வாபஸ் பெறலாம் என்று அமெரிக்கா தீர்மானித்தது. ஆப்கானிஸ்தான் அமைதிக்காக நேட்டோ ராணுவத்தின் பதிமூன்று வருட முயற்சிகள் முடிவுக்கு வந்தது என்பதைக் குறிக்கும் வகையில் காபூலில் ஒரு விழா நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி அவர் களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதென்ன புதுப் பெயர் என்பவர்களுக்கு - ஹமீது கர்ஸாய்க்கு அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அதிபராகியிருக்கிறார் அஷ்ரஃப் கனி. இந்த ஆண்டில் நடை பெற்ற தேர்தல்களில் காபூல் பல்கலைக் கழகத்தின் வேந்தராக விளங்கிய அஷ்ரஃப் கனி வென்றிருக்கிறார்.

ஆனால் இதற்கு முந்தைய தேர்தலில் தோஸ்தும் ஒரு கொலைகாரர் என்று கூறி, அவரது ஆதரவைப் பெற்றதற்காக கர்ஸாயைப் பழித்தவர் இவர். ஆனால் இந்தத் தேர்தலில் தோஸ்து முடன் கூட்டணி வைத்துக் கொண்டார். ‘‘அரசியல் என்பது காதல் திருமணம் அல்ல. சரித்திரத்தின் அவசியங்கள்தான் அரசியலைத் தீர்மானிக்கின்றன’’ என்று விளக்கம் கொடுத்தார். சமீபத்தில் பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் ராணுவ பள்ளிக் கூடத்தில் தாலிபன் தீவிரவாதிகள் 132 குழந்தைகளைக் கொன்று குவித்தனர்.

இதைத் தொடர்ந்து, தாலிபன் ஆதிக்கம் மிகுந்த ஆப்கானிஸ் தானுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது. பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீப் காபூலுக்குச் சென்றார். ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் அஷ்ரப் கனியை சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து அஷ்ரப் கனி, “தீவிரவாதத்துக்கு எதிராக ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் இணைந்து செயல்பட்டு, தீவிர வாதிகளை ஒடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.” என்றார். ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்களில் தாலிபன் தீவிர வாதிகளின் மறைவிடங்களை குறி வைத்து ஆப்கானிஸ்தான் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் கணிசமான தீவிரவாதிகள் இறந்தனர்.

தாலிபன்கள் பதிலுக்குத் தாக்க, அதில் சில பாதுகாப்புப் படை வீரர்கள் சிக்கி வீர மரணமடைந்தனர். தன் சரித்திரம் முழுவதும் சர்வாதிகார ஆட்சிகள், தொடர் யுத்தங்கள், இனப் போராட்டங்கள், பேரழிவுகள் இவற்றை மட்டுமே கண்டுவந்திருக்கும் பரிதாபமான நாடு ஆப்கானிஸ்தான். மக்கள் தொடர்ந்து ஏதோ ஓர் அடக்கு முறைக்கு எப்போதும் ஆட்பட்டிருந் தார்கள்.

எப்போதும் போர் முரசு மத்தியிலேயே வாழ்ந்த நாடு. அமெரிக்கா-சோவியத் பனிப்போர் காலத்தில் பகடைக்காயாக பயன் படுத்தப்பட்ட நாடு. தாலிபன்கள் பிடியில் நசுங்கி நடுங்கிய நாடு. இப்போதுதான் சின்னதாக ஒரு ஜனநாயகம் அங்கே எட்டிப் பார்த்தி ருக்கிறது. ஜனநாயகத்தையும், அமைதி யையும் எத்தனை நாட்களுக்கு ஆப்கானிஸ்தான் தக்கவைத்துக் கொள்ளும்? சரித்திரம்தான் விடை யளிக்க வேண்டும். (அடுத்து கர்ஜிக்கும் நாடு) ஆப்கானிஸ்தானில் உள்ள பிரபல நாட்டுப் பாடல் ஒன்றின் முதல் வரி ‘‘தாய்நாடே, எல்லோ ருமே உன் இதயத்தை அடுத் தடுத்து நொறுக்கினார்கள்’’ என்பது தான். இதைப்பாடும் அந்நாட்டு மக்கள் பலரின் கண்களிலும் கண்ணீர் வழிகிறது.

(இன்னும் வரும்..)


ஜி.எஸ்.எஸ்தொடர்வரலாற்று தொடர்ஜிஎஸ்எஸ் தொடர்ஆப்கான் வரலாறுஉலக அரசியல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author