

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி வட கிழக்கு மாகாணங்களில் 65 பேரை இலங்கை கைது செய்துள்ளது. போதுமான ஆதாரங்கள் இல்லாததால் 5 பேர் விடுவிக்கப்பட்டதாக காவல் துறை செய்தித் தொடர்பாளர் அஜீத் ரோஹணா தெரிவித்தார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க நிதி உதவி செய்ததாகவும் தொடர்புடைய இதர நடவடிக்கைகளில் இறங்கியதாகவும் இவர்களை போலீஸார் கடந்த மாதம் கைது செய்தனர். இவர்களில் 10 பேர் பெண்கள்.
அரசின் தடுப்பு முகாம்களில் 60 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சட்டத்துக்கு உட்பட்டு எல்லா வசதிகளும் அவர்களுக்கு அனுமதிக்கப்படும் என்றார் ரோஹணா.
2009ல் நடந்த இறுதிக்கட்ட போரில் வீழ்ந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புத்துயிரூட்ட முயற்சி நடப்பதாக இலங்கை புகார் கூறி வருகிறது. கடந்த மாதத்தில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி செய்வதாக 420 தனி நபர்களையும் சில பயங்கரவாத அமைப்புகளையும் பட்டியலிட்டு தடைசெய்வதாக அறிவித்தது.
இந்த 16 அமைப்புகளில் விடுதலைப் புலிகள் இயக்கம், உலக தமிழர் பேரவை, பிரிட்டிஷ் தமிழர் பேரவை உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள தமிழர் குழுக்கள் உள்ளிட்டவை அடங்கும்.
மேலை நாடுகளில் உள்ள இந்த குழுக்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுபவை. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை இலங்கைக்கு எதிராக திருப்பிவிடுவது இவைதான். மனித உரிமைகள் மீறல் புகார் விவகாரத்தில் ஐநா மனித உரிமை கவுன்சிலில் நிறைவேறிய 3 அமெரிக்க தீர்மானங்களுமே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவை என்று இலங்கை குற்றம்சாட்டுகிறது.
புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரின்போது சரண் அடைந்தவர்களில் சுமார் 11 ஆயிரம் பேருக்கு மறுவாழ்வு உதவிகளை செய்தது இலங்கை. இறுதிக்கட்டப் போரின்போது சுமார் 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை குழுக்கள், நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.