Last Updated : 24 Dec, 2014 10:18 AM

 

Published : 24 Dec 2014 10:18 AM
Last Updated : 24 Dec 2014 10:18 AM

முஷாரப் மீதான தேச துரோக வழக்கு விசாரணைக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தடை

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீதான தேச துரோக வழக்கில், புதிதாக 3 பேர் சேர்க்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 2007-ம் ஆண்டு அரசியல் சாசன செயல்பாட்டை நிறுத்தி வைத்து, நெருக்கடி நிலையை அமல்படுத்தியதற்காக பர்வேஸ் முஷாரப் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 3 உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு நடுவர் மன்றம் இவ்வழக்கை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் நடுவர் மன்றம் கடந்த மாதம், குற்றத்துக்கு துணை புரிந்ததாக, முன்னாள் பிரதமர் சவுகத் அஜீஸ், முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமீது டோகர், முன்னாள் சட்ட அமைச்சர் ஜாகித் ஹமீது ஆகிய 3 பேரையும் வழக்கில் சேர்க்கும்படி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து இந்த மூவரும் தொடர்ந்த வழக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அத்தர் மினல்லா, இந்த மனு மீது தீர்ப்பு வழங்கப்படும் வரை முஷாரப் மீதான தேச துரோக வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்கும்படி நடுவர் மன்றத்துக்கு உத்தரவிட்டார்.

பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப் 1999-ம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றினார். 2008 வரை அவர் பாகிஸ்தானை ஆட்சி செய்தார். 2008 தேர்தல் மூலம் பாகிஸ்தான் ஜனநாயகப் பாதைக்கு திரும்பிய பிறகு முஷாரப், பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றில் 5 ஆண்டுகள் வசித்தார். இந்நிலையில் 2013 தேர்தலில் பங்கேற்பதற்காக அவர் பாகிஸ்தான் திரும்பினார்.

ஆனால் அவர் மீது, 2007-ல் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொல்லப்பட்டது உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 3 வழக்குகளில் முஷாரப் ஜாமீன் பெற்றுள்ளார். தற்போது கராச்சி நகரில் தனது மகளுடன் வசித்து வருகிறார். வெளிநாடு செல்ல அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x