

எகிப்தில் நேற்று 188 பேருக்கு மரணதண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம். மரணதண்டனை விதிப்பதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. என்றாலும் இத்தண்டனையை நாட்டின் உயர் அதிகார மத அமைப்பு உறுதி செய்யவேண்டியுள்ளது.
எதிர்த் தரப்பினர் மேல்முறையீடு செய்யவும் உரிமை உள்ளது. கெய்ரோவின் மேற்கில், தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த கேர்தாசா நகரில், கடந்த ஆண்டு 11 போலீஸாரை கொன்றதாக இவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதுதவிர 10 போலீஸாரை கொல்ல முயன்றது, காவல் நிலையத்தை சேதப்படுத்தியது, போலீஸ் காருக்கு தீவைத்தது, பெருமளவில் ஆயுதங்கள் வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளும் இந்த 188 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
எகிப்தில் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முகமது மோர்சியின் ஆதரவாளர்கள் தங்கியிருந்த 2 முகாம்களை பாதுகாப்பு படையினர் அகற்றி நூற்றுக்கணக்கானோரை கொன்ற அதே நாளில் இந்த சம்பவம் நடந்தது.