

போபால் விஷவாயு விபத்துக்குக் காரணமாக இருந்த அமெரிக்காவின் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு எதிராக, அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
1984ம் ஆண்டு போபாலில் உள்ள அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனத்தின் இந்தியக் கிளையில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. அதில் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். அந்த விபத்தைத் தொடர்ந்து இன்றும் அங்குள்ள நீர் வளங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருகின்றன.
இதைக் கருத்தில் கொண்டு இந்த விபத்துக்கு அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடும் தர வேண்டும் என்று கூறி அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். ஏற்கெனவே இதே வழக்கில், அமெரிக்காவின் கீழமை நீதிமன்றம் ஒன்று, இந்தியாவில் இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்துக்கு அமெரிக்க நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்று தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவில் யூனியன் கார்பைடு நிறுவனம் கட்டப்பட்டு வந்த சமயத்தில் அந்தப் பணிகளை மேற் பார்வையிட்டு வந்த மேலாளர் லூகாஸ் ஜான் கூவராஸ், தான் அமெரிக்க நிறுவனத்திடம் பணியாற்றியதாகவும், இந்திய நிறுவனத்துக்காகப் பணியாற்றவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இதன் மூலம், இந்திய நிறுவனத்தில் நடந்து வந்த தயாரிப்பு நடவடிக்கைகளுக்கும், கழிவுப் பொருள் வெளியேற்றத்துக்கும், அதனால் ஏற்பட்டு வரும் மாசுபாடுகளுக்கும் அமெரிக்க நிறுவனம் நேரடியாகப் பொறுப்பாகிறது என்பது தெரிய வருகிறது என்று போபால் மக்களின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த மேலாளரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு போபால் மக்களின் சார்பாக 'எர்த் ரைட்ஸ் இன்டர்நேஷனல்' எனும் தொண்டு நிறுவனம் அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.