Published : 14 Nov 2014 10:07 AM
Last Updated : 14 Nov 2014 10:07 AM

உலக மசாலா: ஒரே செடியில் காய்க்கும் தக்காளி, உருளை

டோம்டேடோ என்ற செடியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தச் செடியில் தக்காளியும் காய்க்கிறது, உருளைக் கிழங்கும் காய்க்கிறது! அதாவது செடியின் மேல் பகுதியில் தக்காளிகள் காய்த்துக் குலுங்குகின்றன, வேர்ப் பகுதியில் உருளைக்கிழங்குகள் காய்த்திருக்கின்றன. தக்காளியையும் உருளைக்கிழங்கையும் இணைத்து டோம்டேடோ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பே இதுபோன்ற முயற்சிகள் இருந்திருந்தாலும், தற்போதுதான் வணிக அளவில் வந்திருக்கிறது.

தக்காளியின் தண்டையும் உருளைக்கிழங்கின் தண்டையும் இணைத்து இந்தச் செடி உருவாக்கப்பட்டிருக்கிறது. இது மரபணு மாற்றத்தால் உருவாக்கப்பட்ட செடி இல்லை. முழுக்க முழுக்க இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட செடி. 15 ஆண்டு கால உழைப்பில் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது என்கிறார் இதை உருவாக்கிய தோட்டக்கலையின் டைரக்டர் பால் ஹான்சார்ட். ஒரே செடியில் விளைந்த தக்காளி அதிக இனிப்புச் சுவையுடன் காணப்படுகிறது. இதுவரை 500க்கும் மேற்பட்ட தக்காளிகள் இந்தச் செடியில் இருந்து பறிக்கப்பட்டுள்ளன.

அப்படியே மிளகாயும் வெங்காயமும் ஒரே செடியில் காய்த்துவிட்டால் சமையலே முடிந்துவிடும்!

உலகப் புகழ்பெற்ற ஓவியர் வின்சென்ட் வான் காவின் ஓவியம் ஒன்று 508 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. வான் கா தன்னுடைய கடைசி காலத்தில்தான் புகழ்பெற்ற ஓவியங்களை அதிகம் வரைந்தார். 1890ம் ஆண்டு வரைந்த டெய்சி பூக்கள் நிறைந்த பூந்தொட்டி ஓவியம்தான் இன்று இவ்வளவு விலைக்குப் போயிருக் கிறது. ஆனாலும் உலகம் முழுவதும் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியங்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இந்த ஓவியம் இடம்பெற இயலவில்லை. ஒன்பதாவது இடத்தில்தான் இருக்கிறது.

வான்கா இருந்த காலத்தில் அவரை மதிக்க ஆள் இல்லை… என்ன உலகம் இது…!

சீனாவில் கட்டிடங்களை இடித்துக் கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் சங் லீ. அவரிடம் 45 மீட்டர் உயரம் உடைய ஒரு கட்டிடம் உடைத்துக் கொடுக்கும் வேலை வந்தது. அவ்வளவு பெரிய கட்டிடத்தை 48 வயதுள்ள ஒரே ஓர் ஆளை வைத்து உடைத்து வருகிறார் சங் லீ. பார்ப்பவர்கள் அதிர்ச்சியடைந்து, சங் லீயிடம் அவர் செய்வது தவறு என்கிறார்கள். அருகில் உள்ள கட்டிடங்களுக்கு ஆபத்து வராமல், அதிக செலவில்லாமல், அவசரம் இல்லாமல் இந்தக் கட்டிடத்தை உடைத்துத் தரும்படி அவரது வாடிக்கையாளர் கேட்டுக்கொண்டுள்ளதால், ஒருவரை வைத்து கட்டிடத்தைப் பத்திரமாக உடைத்து வருவதாகச் சொல்கிறார் சங் லீ. என்ன காரணம் சொன்னாலும் தனிப்பட்ட ஒரு மனிதரால் இவ்வளவு உயரமான கட்டிடம் உடைக்கப்படுவது அநியாயம் என்கிறார்கள்.

என்ன கொடுமை இது…

ஷாங்காய் நகரில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஒரு சாதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரு பெரிய அறையில் 388 படுக்கைகளைப் போட்டு, அதில் பெண்கள் அமர வைக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் 388 பேருக்கும் காலை உணவாக நூடுல்ஸ், பழங்கள் வழங்கப்பட்டன. இது புதிய உலக சாதனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் 288 பேர் ஒரே அறையில் உணவு உண்டதுதான் உலக சாதனையாக இருந்து வந்தது.

இங்கே இதெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமாச்சே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x