

நேபாளத்தின் துலிக்கெல் மலைவாசஸ்தலத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர் என்று இந்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் சையது அக்பருதின் கூறினார்.
சார்க் மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் ஓய்வு எடுப்பதற்கும், அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சு நடத்துவதற்கும் வசதியாக காவ்ரே மாவட்டத்தில் உள்ள மலைவாசஸ்தலமான துலிக்கெலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் பேசினார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற மாநாட்டில் இருவரும் பங்கேற்றபோதும் பேசிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
துலிக்கெலில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், பாகிஸ்தான், மாலத்தீவு, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்துப் பேசினர். தெற்காசியப் பிராந்தியம் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்தும் தலைவர்களிடையே பேச்சு நடைபெற்றது. அதே போன்று சார்க் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நிலையிலான சந்திப்பும் நடைபெற்றது.