

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அமைப்பு (சார்க்) நாடுகளின் 18-வது மாநாடு நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இன்று தொடங்குகிறது.
இந்தியா, நேபாளம், பூடான், வங்கதேசம், இலங்கை, மாலத் தீவுகள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் சார்க் அமைப்பில் உள்ளன. இன்று தொடங்கி 2 நாள் நடைபெறும் 18-வது மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இம்மாநாட்டில் உறுப்பு நாடுகளிடையே பாதுகாப்பு, போக்குவரத்து தொடர்புகளை மேம்படுத்துவது, வர்த்தகத்தை பெருக்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படுகிறது. நரேந்திர மோடி இந்தியப் பிரதமரான பிறகு நடைபெறும் முதல் சார்க் மாநாடு இது. சார்க் அமைப்பை வலுப்படுத்துவதில் மோடி ஆர்வம் கொண்டுள்ளதால் அவர் முன்வைக்கப்போகும் திட்டங்கள் தொடர்பாக உறுப்பு நாடுகளிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலைக்குழு மாநாட்டில் பங்கேற்கிறது. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பல்வேறு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மோடி அறிக்கை
நேபாளம் புறப்படும் முன் பிரதமர் மோடி டெல்லியில் வெளியிட்ட அறிக்கையில், “இந்த மாநாடு நான் பங்கேற்கும் முதல் சார்க் மாநாடாக இருந்தாலும், எனது பதவியேற்பு விழாவில் பங்கேற்றது முதல் கடந்த 6 மாதங்களில் சார்க் நாடுகளின் தலைவர்களுடன் நான் விரிவாக பேசியுள்ளேன். நமது அண்டை நாடுகளுடன் நெருங்கிய உறவை வலுப்படுத்துவதே எனது அரசின் முன்னுரிமைப் பணியாக இருக்கும்” என்று குறிப்பிட் டுள்ளார்.
மோடி நவாஸ் சந்திப்பு?
சார்க் மாநாட்டின்போது, இலங்கை பிரதமர் ராஜபக்ச, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி உள்ளிட்டோரை பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்துப் பேசுகிறார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை அவர் சந்திப்பது தொடர்பாக அவரது பயணத்திட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மோடி நவாஸ்ஷெரீப் சந்திப்பு தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் கேட்டபோது, “பொறுத்திருந்து பாருங்கள்” என்று அவர் மழுப்பலாக பதில் அளித்தார். இந்நிலையில் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறும்போது, “மோடி நவாஸ் ஷெரீப் சந்திக்கும் திட்டம் எதுவுமில்லை. இது தொடர்பாக இந்தியா முயற்சித்தால் நாங்கள் பரிசீலிப் போம்” என்றார்.
காத்மாண்டுவில் நேற்று நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட சுஷ்மா ஸ்வராஜும் பாகிஸ்தான் அதிகாரி சர்தாஜ் அஜீஸும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.