

ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிறன்று கஜினி நகரின் மையப்பகுதியில் ரஹ்மதி ஸ்கூல் என்ற சிறுவர்கள் பள்ளியருகே நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரக் குண்டுவெடிப்புத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர், இதில் பெரும்பாலும் பள்ளிக் குழந்தைகள் என்பதுதான் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், தாக்குதல் நடத்திய தலிபான்களோ அவர்களது இலக்கு பள்ளியல்ல, பாதுகாப்பு தேசிய இயக்குனரக கட்டிடமே என்று கூறுகின்றனர்.
அந்த கறுப்பு தினத்தில் நடந்தது பற்றி கல்வித்துறை மாகாண இயக்குநர் முஹிப் உர் ரஹ்மான் கூறும்போது, “கடந்த ஞாயிறு காலை 8.30 மணியளவில் குண்டு வெடித்தது. இது ரஹ்மதி ஸ்கூல் என்ற தனியார் பள்ளிக்கு அருகிலாகும். பலியான குழந்தைகளில் 11 வயதுக்குட்பட்டவர்களே அதிகம். அப்பகுதி ரத்தக்களறியாக போர்க்களம் போல் காட்சியளித்தது, பல ஆசிரியைகள் காயமடைந்து வேதனையில் முனகிக் கொண்டிருந்தனர். என்னிடம் சில புகைப்படங்கள் உள்ளன, ஆனால் அவற்றை என்னால் பகிர முடியாது, அத்தனை கொடூரம்” என்றார்.
120க்கும் மேற்பட்டோர் பலியாகியதில் 59 பேர் அப்பாவிக் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்த குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர், சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் மன நிலை, உடல் நிலை எப்படி இருக்கும் என்று உறுதி கூற முடியாது என்கிறது ஆப்கான் வட்டாரங்கள்.
இதில் முரண் என்னவெனில் தோஹாவில் தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அதிகாரிகள் கூடியிருந்தனர், செவ்வாயன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அப்பாவி மக்கள் சாவைத் தடுப்பது பற்றி பேசப்பட்டது. தலிபான்கள் பள்ளிகள், மசூதிகள், பல்கலைக் கழகங்கள், சந்தைகள், குடியிருப்புப் பகுதிகளைத் தாக்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஒரு வாரம் முன்பாக நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 100 பேருக்கும் மேல் பலியாகினர், இந்தச் சந்தர்ப்பத்திலும் பாதிபேர் மாணவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
சிரியா, ஏமன், இராக் போன்ற நாடுகளை விட மிகவும் பயங்கரம் சூழ்ந்த போர்க்களமாக ஆப்கான் இருப்பதாக 2019 பாதுகாப்பு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆப்கான் கல்வி அமைச்சக இயக்குநர் நஸ்ரதுல்லா சுல்தான்ஸாய் கூறும்போது, “காயத்திலிருந்து மீண்டு மாணவர்கள் விரைவில் படிப்பைத் தொடர ஆசைப்படுகின்றனர். அவர்களைப் பார்க்கும் போது, கல்வியைத் தொடர அவர்களது உறுதியைப் பார்த்த போது என் கண்களில் கண்ணீர் பெருகியது. அவர்களது அர்ப்பணிப்ப்பு நாட்டின் எதிர்காலத்தை எனக்கு உணர்த்தியது. எங்களால் வேறு என்ன செய்ய முடியும்? கடவுளிடம் உதவிதான் கேட்க முடியும்” என்று வேதனை வெளியிட்டார்.
குழந்தைகள் உயருக்கு மிக மிக ஆபத்தான ஒரு நாடாகி வருகிறது ஆப்கானிஸ்தான். 10 இடங்களில் குண்டு வெடித்தால் அதில் 8 இடங்களில் குழந்தைகள் பலி எண்ணிக்கைதான் அதிகம் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உடல் ரீதியான துன்பத்தைத் தவிர குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்பட்டு மீள முடியா நிலைக்குச் செல்கின்றனர், இது ஏற்றுக் கொள்ள முடியாது என்று ‘குழந்தைகளைப் பாதுகாப்போம்’ என்ற அமைப்பின் இயக்குநர் ஒன்னோ வான் மானென் வேதனை வெளியிட்டுள்ளார்.
குழந்தைகளை ஊனமாக்குவது, கொலை செய்வதை கைவிடுங்கள் என்று அனைத்து ஆயுதப் போராட்டக்காரர்களுக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதைத் தடுக்கவில்லையெனில் ஒரு தலைமுறையே ஊனமுற்றும், மனநலம் பாதிக்கப்பட்டும் வாழ நேரிடும் என்று அவர் எச்சரிக்கிறார்.