Published : 05 Jul 2019 05:31 PM
Last Updated : 05 Jul 2019 05:31 PM

மூடப்பட்ட அறையில் பேச்சு வார்த்தைகள் வேண்டாம்: ஹாங்காங் மாணவர்கள்

மூடப்பட்ட அறையில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளுக்கு தயராக இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹாங்காங் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் மாணவர்கள் நடத்தும் போராட்டங்களை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஹாங்காங்  நிர்வாக தலைவர் கேரி லேம் விடுத்த அழைப்பை மாணவர்கள் நிராக்கரித்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர்கள் அமைப்பு தரப்பில், "லேம் அவரது கடமையில் சரியாக செயல்படவில்லை. மூடப்பட்ட அறையில் நடத்தப்படும் பேச்சுவார்தைக்கு அவரது அலுவலகத்திலிருந்து எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாங்கள் பொதுமக்கள் மற்றும் எங்கள் பிரதிநிதிகள் முன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையை விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்தது ஹாங்காங். பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

இந்நிலையில், குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டு வந்தது. இதன்மூலம், ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கப்படுவார்கள். மேலும், இந்தச் சட்டத்திருத்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதில் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் உறுதியாக இருந்தார்.

ஆனால், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஹாங்காங்கின் எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் இறங்கினர். கடந்த  மாதம் ஆயிரக்கணக்கானோர் ஹாங்காங் வீதிகளில் போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் ஹாங்காங்கில் பதற்றம் ஏற்பட்டது. உள்நாட்டுக் கலவரம் பெரிதாகும் சூழல் உருவானது.

இதனைத் தொடர்ந்து கைதிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத் திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாக ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் கடந்த வாரம் அறிவித்தார்.

எனினும் குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்யுமாறு ஹாங்காங்கில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x