Last Updated : 05 Jul, 2019 01:24 PM

 

Published : 05 Jul 2019 01:24 PM
Last Updated : 05 Jul 2019 01:24 PM

மனைவியைக் கொன்று 100 நாட்களுக்கு மேல் ப்ரீஸரில் மறைத்து நாடகம்; சீன இளைஞருக்கு மரண தண்டனை

மனைவியைக் கொன்று 100 நாட்களுக்கு மேலாக உடலை ப்ரீஸர் ஒன்றில் மறைத்து வைத்த சீனாவைச் சேர்ந்த இளைஞருக்கு ஷாங்காய் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இதுகுறித்து அரசின் நாளிதழான சீனா டெய்லி வெளியிட்ட தகவல்கள் வருமாறு:

கொலையுண்ட யாங் லிப்பிங் (30) தனது பெற்றோருக்கு ஒரே குழந்தையாவார். ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றியவர். அவரது கணவர் ஜு சியாடோங் (30) ஒரு துணிக்கடையில் பணியாற்றி வந்தவர்,

கடந்த 2016 அக்டோபர் 17 அன்று கணவன் மனைவியரிடையே வாக்குவாதம் நடந்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் யாங்கின் கழுத்தை நெரித்துக் கொன்று ஹாங்கோ மாவட்டத்தில் தமது வீட்டில் மறைத்துவைத்துள்ளார் ஜு.

தனது இறந்த மனைவியின் உடலைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்ட ப்ரீஸர் ஒன்றை ஆன்லைனில் வாங்கியுள்ளார்.

திடீரென ப்ரீஸர் வாங்கியது குறித்து கேட்டவர்களிடம் தனது செல்லப் பாம்புகள், பல்லிகள் மற்றும் தவளைகளுக்கு இறைச்சி சேமிப்பதற்காக தான் அதை வாங்கியதாக அவர் கூறினார்.

தனது மனைவியைக் கொன்று அவரது உடலை பால்கனியில் யாரும் பார்க்காதவாறு ஒரு ப்ரீஸரில் போட்டு கிட்டத்தட்ட 106 நாட்களாக மறைத்து வைத்துள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய மனைவி இறந்தது யாருக்கும் தெரியாமல் இருக்க அவர் தனது மனைவியின் சமூக வலைப்பின்னல் கணக்குகளில் உள்நுழைந்து யாங்கின் பெற்றோர் மற்றும் நண்பர்களின் குறுஞ்செய்திகளுக்கு பதிலளித்து வந்துள்ளார்.

கொலையை மறக்க சுற்றுப் பயணம்

மனைவி யாங் இறந்த பிறகு, குற்றஞ்சாட்டப்பட்ட ஜு ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஹைனான் மாகாணம், நாஞ்சிங் மற்றும் சுஜோ நகரங்களுக்கு மட்டுமின்றி தென்கொரியாவுக்கும் பயணம் செய்து திரும்பியுள்ளார்.

தன் மனைவியை தான் கொலை செய்த சம்பவத்தை மறக்கவே அவர் பயணங்களில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

அவர் தனது மனைவின் கடன் அட்டைகளைக் கொண்டு ஆடம்பர பொருட்கள் வாங்குதல் மற்றும் அன்றாட செலவுகளை செய்தார். அவர் தனது மனைவியின் அடையாள அட்டையைக் கொண்டே மற்றொரு பெண்ணுடன் ஹோட்டல் அறைகளுக்குச் செல்லவும் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனது மனைவி யாங் லிப்பிங்கின் கிரெடிட் கார்டில் இருந்து கிட்டத்தட்ட 150,000 யுவான் (21,800 அமெரிக்க டாலர்) பணத்தை எடுத்து மற்றொரு பெண்ணுடன் பயணம் செய்வதன் மூலம் கொலையை மறக்க முயன்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து மாலை மாமியாரின் பிறந்தநாள் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜுவின் மனைவி உயிரோடு இருப்பதாக நினைத்து தம்பதிகள் இருவரையும் விருந்தில் கலந்து கொள்ளும்படி அழைக்கப்பட்டிருந்தனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த ஜு அவரால் இனியும் உண்மையை மறைக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளார். இதன் பிறகு, தனது பெற்றோருடன் போலீசார் முன் ஜு சரணடைந்தார்.

மரண தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் ஷாங்காய் எண் 2 இடைநிலை மக்கள் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக ஜு மேல்முறையீடு செய்தார்.மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட பிறகு மீண்டும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

எனினும் ஷாங்காய் உயர் மக்கள் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) ஜுவுக்கு விதித்த மரண தண்டனையை உறுதிப்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x