உலக மசாலா: 15,000 கிலோமீட்டர் நடைப்பயணம்

உலக மசாலா: 15,000 கிலோமீட்டர் நடைப்பயணம்
Updated on
2 min read

தாளில் வரைந்த ஓவியம் தாளை விட்டு வெளியே குதித்தால் எப்படி இருக்கும்! அதேபோல ஓவியங்களை வரைகிறார் பிரேஸிலைச் சேர்ந்த 15 வயது ஜோவோ கார்வல்ஹோ. கோடு போட்ட தாளில் வரையப் பட்ட 3டி ஓவியங்கள், தாளை விட்டு வெளியே குதிப்பது போல அவ்வளவு அட்டகாசமாக இருக்கின்றன! வெள்ளைத் தாளில் நீல வண்ண பேனாவில் கோடுகளை வரையும்போதே வளைந்து, நெளிந்து வரைந்துவிடுகிறார். வளைந்த பகுதிகளைச் சுற்றி, நிழல்போல வண்ணத்தால் உருவாக்கி விடுகிறார். பார்ப்பதற்கு ஓர் உருவம் தாளில் இருந்து கிளம்பி மேலே வருவது போலத் தோன்றுகிறது. வண்ணங்கள் இல்லாத எளிமையான இந்த ஓவியங்கள், மிகப் பிரமாதமாக இருக்கின்றன!

மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது!

47 வயது ஸ்காட் லாக்ஸ்லே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15,000 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடப்பதற்காகக் கிளம்பினார். ஸ்டார் வார்ஸ் ஆடைகளை அணிந்துகொண்டு, கைவண்டியை இழுத்தபடி நடந்துகொண்டிருக்கிறார். 2016ம் ஆண்டு திறக்க இருக்கும் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் பல்வேறு குழந்தைகள் நல அறக்கட்டளைகளுக்காக இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ஸ்காட். மூன்று குழந்தைகளின் தந்தையான ஸ்காட், தன்னுடைய குழந்தை மருத்துவமனையில் இருந்தபோது, சிறந்த மருத்துவமும் நவீன கருவிகளும் இருக்கவேண்டும் என்று நினைத்தார். அப்பொழுது தோன்றியதுதான் இந்த யோசனை. ஸ்டார் வார்ஸ் ஆடைகளை அணிந்துகொண்டு, ஆஸ்திரேலிய பாலைவனங்களில் பயணிப்பது போல ஒரு கொடுமையான விஷயம் உலகில் கிடையாது என்கிறார் ஸ்காட்.

உங்க கஷ்டத்துக்குப் பலன் இருக்கும் ஸ்காட்!

அமெரிக்காவில் உள்ள ஆர்கென்சாஸ் மாநிலத்தில் வித்தியாசமான போட்டி நடத்தப்படுகிறது. அதாவது ரோட்டோடில்லர் இயந்திரத்தைக் கொண்டு நிலத்தை உழுவதுதான் போட்டி. விவசாய நிலத்தை உழுதது போலவும் இருக்கும்; போட்டி நடத்தியது போலவும் இருக்கும். போட்டி நடைபெறும் இடம் புழுதிப்படலமாகக் காட்சியளித்தாலும், இதில் ஆண்களும் பெண்களும் மிகவும் ஆர்வத்தோடு கலந்துகொள்கிறார்கள். தற்போது நடைபெற்ற போட்டியில், 200 அடி பரப்பளவை, 5.72 நொடிகளில் உழுது ஷேன் வாலர் புதிய உலக சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்!

எல்லா விஷயங்களையும் போட்டியா மாத்திடறாங்களே… எப்படி?

மேற்குலக நாடுகளில் விவாகரத்து செய்த ஆண்களும் மனைவியை இழந்த ஆண்களும் பொம்மைகளுடன் குடும்பம் நடத்தி வருகின்றனர். விவாகரத்து செய்தபின், இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து, புரிந்துகொண்டு வாழ்க்கையை நடத்துவதை விட பொம்மை களுடன் வாழ்க்கை நடத்துவது எளிதாக இருக்கிறது என்கிறார்கள். கேன்சரில் இறந்து போன மனைவி எரிகாவை மறக்க முடியாமல், ஒரு பொம்மையை வாங்கி, எரிகா என்று பெயரிட்டு அழைக்கிறார் ஒருவர். பொம்மைகளுக்கு விதவிதமாக அலங்காரம் செய்து, ஆடைகளை அணிவித்து, எங்கும் அழைத்துச் செல்கிறார்கள். லட்சக்கணக்கில் பொம்மைகளுக்குச் செலவு செய்வதை இவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. சீனா, தென்கொரியா, துருக்கி, ஜப்பான் போன்ற நாடுகள் இந்தப் பொம்மைத் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன.

இதை எல்லாம் என்னன்னு சொல்றதுன்னே தெரியலை…

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in