Published : 12 Nov 2014 10:22 AM
Last Updated : 12 Nov 2014 10:22 AM

உலக மசாலா: வீணான ரூ. 50 லட்சம் ஐபோன்

சீனாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒருவர் புதுமையான வழியில் தன் காதலைத் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய இரண்டு ஆண்டு சம்பளத்தைச் சேர்த்து வைத்து, சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு 99 ஆப்பிள் ஐபோன் 6 வாங்கினார். அவற்றை எல்லாம் இதய வடிவில் அடுக்கி வைத்தார். அதற்குள் நின்றபடி கையில் ஒரு போன், பூங்கொத்துடன் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி ஒரு பெண்ணிடம் கேட்டார். அந்தப் பெண் காதலை ஏற்க மறுத்துவிட்டார். நண்பர்கள், சக ஊழியர்கள் புடைசூழ காதலைத் தெரிவித்தவர், அதிர்ந்து போய்விட்டார்.

இப்படி எல்லாம் முட்டாள்தனமா காதலைச் சொன்னால் எப்படி ஏத்துப்பாங்க!

ஆண்ட்ரூ இவானிகிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வேலை பறிபோனபோது, இனி தூங்கித்தான் பொழுதைக் கழிக்க வேண்டும் என்று நினைத்தார். மறுநாளே நாசாவிடமிருந்து அவரைத் தேடி ஒரு வேலை வந்தது. அதுவும் தூங்கக்கூடிய வேலை! 3 மாதங்கள் படுக்கையில் இருப்பதற்கு 11 லட்சம் ரூபாய் கொடுத்து, ஆண்ட்ரூவைச் சேர்த்துக்கொண்டார்கள். விண்வெளியில் மனிதனின் தசைகளும் எலும்புகளும் எப்படி வேலை செய்கின்றன என்பதைப் பற்றிய ஆராய்ச்சிக்குத்தான் ஆண்ட்ரூ சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த ஆராய்ச்சியில் 54 பேர் இதுவரை பரிசோதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆண்ட்ரூதான் கடைசி மனிதர். பரபரப்பான வாழ்க்கை இன்றி, நிம்மதியாகப் படுக்க ஆரம்பித்தவருக்குப் பிறகுதான் வந்தது சோதனை. விண்வெளியில் உள்ள சூழ்நிலையில் ஆண்ட்ரூ வைக்கப்பட்டிருப்பதால், ஈர்ப்பு விசை அந்த இடத்தில் இருக்காது. இதனால் தலை வலி, கழுத்து வலி, முதுகு வலி, உணவு செரிமானத்தில் பிரச்சினை என்று கஷ்டப்பட்டிருக்கிறார். ஐந்து நாட்களுக்குப் பிறகு அவரது உடல் அந்தச் சூழலுக்கு ஏற்றபடி மாற ஆரம்பித்திருக்கிறது.

ஆனாலும் அவரால் தண்ணீர் குடிக்க முடியவில்லை. புத்தகம் படிப்பது, டிவி பார்ப்பது என்று தன்னுடைய மனநிலையை மாற்றிக்கொண்டு, பரிசோதனைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். இன்னும் 7 வாரங்கள் இப்படிப் படுத்திருக்க வேண்டும்!

தூங்குகிற வேலைன்னு கூட்டிட்டுவந்து, இப்படிப் பண்ணிட்டாங்களே ஆண்ட்ரூ!

தென் ஆப்பிரிக்காவில் உள்ள லண்டோலோஸி வனப்பகுதிக்கு, ஆராய்ச்சிக்காகச் சென்றார் லூசியன் பீமண்ட். திடீரென்று 17 சிங்கங்கள் கூட்டமாக இரை தேடி வேட்டைக்குக் கிளம்பின. வழியில் ஒரு சின்னஞ்சிறு முள்ளம்பன்றி மாட்டிக்கொண்டது. உணவு கிடைத்த மகிழ்ச்சியில் அதைச் சூழ்ந்து நின்றன. தாக்குவதற்காக முயன்றன. ஆனால்

எவ்வளவு நேரமாகியும் எந்தச் சிங்கத்தாலும் முள்ளம்பன்றியைத் தாக்க முடியவில்லை. உடலைப் பந்துபோல் மாற்றிக்கொண்டு, முட்களை நீட்டியபடி கடினமாக எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்தது முள்ளம்பன்றி. நீண்ட நேரம் போராடியும் சின்ன இரையைப் பிடிக்க முடியாத ஏமாற்றத்தில் சிங்கங்கள் அங்கிருந்து அகன்றன. முள்ளம்பன்றி உயிரைக் காப்பாற்றிக்கொண்ட மகிழ்ச்சியில் வேகமாக ஓடி, மறைந்தது. எதிரியை நோக்கி முள்ளம்பன்றி முட்களை வீசும் என்பது உண்மையல்ல என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது என்கிறார் லூசியன்.

அடடா! இத்தனை நாளும் முள்ளம்பன்றி முட்களை அம்பு போல வீசும்னு தானே நினைச்சிட்டிருந்தோம்…

புளோரிடாவின் டாம்பா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென்று பூமிக்குள் இறங்கியது. 10 மீட்டர் ஆழமும் 10 மீட்டர் அகலமும் கொண்ட புதைகுழி காரை அப்படியே கீழே இழுத்துவிட்டது. அருகில் வசித்த குடும்பங்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினார்கள். பூமியில் ஏற்பட்ட திடீர் பள்ளத்துக்கான காரணத்தை ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

நல்லவேளை காரோடு போனது…!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x