Last Updated : 08 Jul, 2019 12:07 PM

 

Published : 08 Jul 2019 12:07 PM
Last Updated : 08 Jul 2019 12:07 PM

பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி: அமெரிக்காவில் சொகுசு ஓட்டலை தவிர்த்து தூதரகத்தில் தங்கும் இம்ரான் கான்

பாகிஸ்தான் பணநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், அமெரிக்காவுக்கு அடுத்தவாரம் செல்லும் பிரதமர் இம்ரான் கான், சொகுசு ஓட்டலில் தங்காமல் தங்கள் நாட்டு தூதரகத்திலேயே தங்குவதற்கு முடிவு செய்துள்ளார்.

சிக்கன நடவடிக்கை எடுத்தால்தான் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பதால், வேறுவழியின்றி இதுபோன்ற நடவடிக்கையில் இம்ரான் கான் இறங்கியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக பதவிஏற்றவுடன் இம்ரான் கான் ஏராளமான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தினார். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இருந்த ஏராளமான சொகுசு கார்களை ஏலம் விட்டார், வீடுகளை ஏலம் விட்டார், அதிகாரிகளுக்கு சலுகைகளை குறைத்தார்.

 இதுபோன்ற பல சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பாகிஸ்தான் பொருளாதாரம் அதளபாதாளத்தில் செல்வதால் வேறு வழியின்றி இதைச் செய்து வருகிறார்.

வரும் 21-ம் தேதி அமெரிக்காவுக்கு 3 நாட்கள் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செல்கிறார். வழக்கமாக  இதற்குமுந்தைய பிரதமர்கள் செல்லும் போது, பல்வேறு சொகுசு வசதிகள் கொண்ட விலை உயர்ந்த ஓட்டலில் தங்கி தங்கள் அலுவல்களை செய்வார்கள்.

ஆனால், தற்போது பயணம் மேற்கொள்ள உள்ள இம்ரான் கான் தங்களுடைய நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, உலக வங்கியிடம் கடன் கேட்கச் செல்கிறார். உலக வங்கியும் 600 கோடி டாலர் கடன் அளிக்க முன்வந்துள்ளது.

ஆனால், கடன் அளிக்கும் முன் உலக வங்கி, பாகிஸ்தானுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பாகிஸ்தான் அரசு பணத்தை தாராளமாக செலவு செய்யாமல், பொருளாதார வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் செலவிட வேண்டும், அதிகாரிகள் தங்களின் தேவையற்ற செலவை குறைத்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனால் அமெரிக்கா செல்லும் பாக். பிரதமர் இம்ரான் கான் சொகுசு ஓட்டலில் தங்காமல், தங்கள் நாட்டு தூதரகத்தின் விருந்தினர் இல்லத்தில், அடிப்படை வசதிகள் மட்டுமே இருக்கும் அறையில் தங்குகிறார் என்று டான் நாளேடு தெரிவித்துள்ளது.

வாஷிங்டன் நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த தூதரகங்கள் நிறைந்த பகுதியால்தான் பாகிஸ்தான் தூதரகம் அமைந்துள்ளது. இந்த பகுதியில்தான் ஜப்பான், துருக்கி நாட்டு தூதரகங்களும் அமைந்துள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தூதரகத்தில் தங்குவதால், பாதுகாப்பு சிக்கல் ஏதும் வராதவாறு அமெரிக்க போலீஸார் அதை உறுதி செய்வது அவசியமாகும். 3 நாட்கள் இம்ரான் கான் இங்கு தங்குவதால், போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களை அமெரிக்க போலீஸார் செய்வார்கள் எனத் தெரிகிறது.

பாகிஸ்தான் தூதரகம் மிகவும் சிறியது. இங்கு வரும் அனைத்து அதிகாரிகளையும் அழைத்து ஒரேநேரத்தில் பேசவும் முடியாது, சிறப்பு ஆலோசனைக் கூட்டமும் நடத்துவது என்பதும் கடினம்.

ஒருவேளை பாகிஸ்தான் தூதரகத்தில் இம்ரான் கான் தங்கமுடியாத சூழல் பாதுகாப்புகாரணங்களால் ஏற்பட்டால், வாஷிங்டன் நகரின் புறநகரில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஏராளமான வசதியான முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் தங்குவார் எனத் தெரிகிறது. அவ்வாறு தங்கினால், அது மேலும் அமெரிக்க போலீஸாருக்கு பாதுகாப்பு அளிப்பதில் சிக்கலாக உருவெடுக்கும்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x